Home கருத்தாய்வு தேசிய முன்னணியா, பக்காத்தானா? எந்தப் பக்கம்? – தடுமாறும் ஹிண்ட்ராப்!

தேசிய முன்னணியா, பக்காத்தானா? எந்தப் பக்கம்? – தடுமாறும் ஹிண்ட்ராப்!

1015
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 9 – எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு கைகோர்க்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிண்ட்ராப் இயக்கம், தற்போது பெரும் குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் இருந்து வருகின்றது.

ஹிண்ட்ராப் இயக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே மந்தமான சூழ்நிலையில் செயல்பட்டு  வந்தது. ஆனாலும் அதன் தலைவர் வேதமூர்த்தி நாடு திரும்பியவுடன் அந்த இயக்கத்தினர் சுறுசுறுப்படைந்தனர். நாடு திரும்பிய வேதமூர்த்திக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டதோடு, நாட்டின் பல பகுதிகளில் சந்திப்புக் கூட்டங்களும், விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஹிண்ட்ராப் அரசியல் ரீதியாக தேசிய முன்னணி பக்கம் சாயுமா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியோடு கைகோர்க்குமா என்ற ஆரூடங்களும் கிளம்பத் தொடங்கின.

#TamilSchoolmychoice

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக செயல் திட்டம் ஒன்றினை தற்போது முன்மொழிந்துள்ள ஹிண்ட்ராப் மக்கள் சக்தி கூட்டணி எந்த கூட்டணி இந்த செயல் திட்ட வரைவினை ஏற்றுக் கொள்கின்றதோ அவர்களுக்குத்தான் தங்களின் ஆதரவு என்ற நிபந்தனையையும் ஹிண்ட்ராப் விதித்துள்ளது.

பக்காத்தான் ராயாட் கூட்டணி ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு செயல்திட்ட வரைவினை ஏற்றுக் கொண்டு ஆதரவு கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை பக்காத்தான் அவ்வாறு முன்வரவில்லை. இனியும் முன் வருவார்களா என்பதும் சந்தேகமே.

காரணம் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் பயனளிக்கும் வித த்தில் ஒரு பொதுவான அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வரும் பக்காத்தான் ராயாட் கூட்டணி, இந்தியர்களை மட்டும் முன்னிலைப்படுத்தும், அவர்களுக்கு மட்டுமே உதவும் ஒரு செயல் திட்ட வரைவினை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தயங்குவதாக தெரிகின்றது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அதனால் தற்போதுள்ள மலாய்க்கார வாக்குகளை மீண்டும் கவர்வதில் பக்காத்தான் கூட்டணி பின்னடைவை எதிர்நோக்கலாம் என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிகின்றது.

ஹிண்ட்ராப் இயக்கமும் முதலில் பேச்சு வார்த்தைகள் நடத்தி ஒரு சுமுகமான, இணக்கமான சூழ்நிலையை அரசியல் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்டு அதன்பின்னர் தங்களின் நிபந்தனைகளை விதிப்பதுதான் காலத்துக்கேற்ற செயலாக இருக்கும். அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே நிபந்தனைகளுடன் கூடிய ஒரு செயல்திட்ட வரைவினை கையில் வைத்துக் கொண்டு இதனை ஏற்றுக் கொள்பவர்களுடன்தான் அரசியல் கூட்டணி என செயல்படுவது நடைமுறை அரசியலுக்கும் மாறிவரும் மலேசிய அரசியல் சூழ்நிலைக்கும் ஒவ்வாத ஒன்றாகும்.

அதைவிட மோசமான அரசியல் தந்திரமாக, நீங்கள் வராவிட்டால் நாங்கள் தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம், என்று ஹிண்ட்ராப் கூறுவதும் பொருத்தமில்லாத அணுகுமுறையாகும். தேசிய முன்னணியில் ம.இ.கா அங்கம் வகிக்கும் வரை இன்னொரு இந்திய அரசியல் சார்ந்த அமைப்பினை தேசிய முன்னணி அனுமதிக்கும் வாய்ப்பு இல்லை.

மேலும், டத்தோ தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி கட்சியுடனும், டத்தோ நல்லா தலைமையிலான ம.இ.மு.க கட்சியுடனும், ஐபிஎப் கட்சியுடனும், மலேசிய இந்திய முஸ்லிம்களைக் கொண்ட கிம்மா கட்சியுடனும் அணுக்கமான நட்புறவு பாராட்டி வரும் தேசிய முன்னணி ஹிண்ட்ராப்புடன் இனியும் கைகோர்க்குமா என்பதும் சந்தேகம்தான்.

அப்படியே இந்த ஐந்தாண்டு செயல் திட்ட வரைவினை தேசிய முன்னணி ஏற்றுக் கொண்டாலும், அதனால்  அதிகம் பாதிப்படையப் போவதும் ஹிண்ட்ராப்தான். எந்த தேசிய முன்னணியின் தவறான செயல்பாடுகளால் ஹிண்ட்ராப் உதயமானதோ அதே தேசிய முன்னணியோடு வெறும் அரசியல் காரணங்களுக்காக உடன்பாடு காண்பதும், ஒட்டி உறவாடுவதும், ஹிண்ட்ராப் மீதான மக்களின் மரியாதையையும், நம்பிக்கையையும் குலைக்கவே செய்யும்.

எனவே, தேசிய முன்னணியா, பக்காத்தான் கூட்டணியா என்ற தடுமாற்றத்திலும் குழப்பத்திலும் ஹிண்ட்ராப் தனது பயணத்தைத் தொடர்கின்றது.