கோலாலம்பூர், 8 ஜனவரி – 1990ஆம் ஆண்டுகளில் ஜப்பானிய அரசாங்கம் சயாம் ரயில் திட்டத்தில் பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர்களின் சந்ததியினருக்காகவும் நஷ்ட ஈடாக வழங்கிய 207 பில்லியன் ரிங்கிட் என்னவாயிற்று என்பதை தேசிய முன்னணி அரசு மக்களுக்கு விளக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வேண்டுகோள் விடுத்தார்.
தான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இந்த தொகை நிதியமைச்சின் வழியாக அரசாங்கத்திற்கு வரவில்லை என்றும் கூறியுள்ள அவர் அந்த பணம் என்னவாயிற்று என்பது குறித்து விளக்கம் கூறாமல் இனியும் தேசிய முன்னணி அரசாங்கம் மௌனம் சாதித்து காலம் தள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.
1942 முதல் 1946ஆம் ஆண்டு வரை சயாம் மரண ரயில் பாதை என்று பின்னர் அழைக்கப்பட்ட திட்டத்திற்கு உடலுழைப்பிற்காக பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் ஜப்பானியர்களால் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலர் மரணம் அடைந்தனர் என்பதோடு, ஏறத்தாழ 30,000 பேர் பின்னர் உடல் நலம் குன்றியும், குற்றுயிருமாக நாடு திரும்பினர்.
அவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்ட ஈடு என்னவாயிற்று என்பதை தேசிய முன்னணி அரசாங்கம் விளக்க வேண்டும் என்ற நெருக்குதல்களும் அறைகூவல்களும் நாடு முழுமையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.