கோலாலம்பூர் – மலேசிய ரசிகர்களுக்கு அக்டோபர் மாதம் ஒரு உற்சாகமான மாதமாக அமையப் போகிறது. காரணம் முன்னணி மலேசிய நட்சத்திரங்களின் உருவாக்கத்தில் மூன்று முக்கியப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
அக் 8 முதல் ‘மறவன்’
எஸ்.டி.புவனேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில், அஸ்ட்ரோ விழுதுகள் புகழ் அறிவிப்பாளர் குமரேஸ், டேனிஸ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி, லோகன், சீலன், கவிதா தியாகராஜன், புஷ்பா நாராயண் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பிரபல நடிகர் ஹரிதாஸ் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகின்றார். இப்படத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த ஜோஸ் பிராங்கிளின், சைக்கோ மந்திரா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் நாடெங்கிலும் வெளியீடு காணவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஹரிதாசின் மிரட்டலான தோற்றத்துடன் கூடிய படம் ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு, நேற்று மின்னல் பண்பலையில் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அக் 22 முதல் ‘முத்துக்குமார் வாண்டட்’
மலேசியா – இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘முத்துக்குமார் வாண்டட்’.
மலேசியாவின் முன்னணி இசையமைப்பாளர் சுந்தரா இப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். சுந்தராவின் ஆஸ்தான பாடலாசிரியரான கோக்கோ நந்தா பாடல்வரிகள் எழுதியிருப்பதோடு, பிரபல பாடகர்களான நரேஷ் ஐயர், திவாகர் உள்ளிட்டோர் உடன் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
எம்.பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக சரண் அவருக்கு ஜோடியாக மலேசிய நடிகை நஷிரா நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
அக் 29 முதல் ‘இரவன்’
கேஷ் வில்லன்ஸ் திரைக்கதை இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இரவன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 29-ம் தேதி முதல் திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு குறித்து அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு ஏவி வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பூபா படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பு பணிகளையும் கேஷ் வில்லன்சே செய்துள்ளார். பாடல்களை மணி வில்லன்ஸ் எழுதியுள்ளார்.
அடுத்த மாதம், தமிழகப் படங்களான விஜய் நடிப்பில் ‘புலி’ உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு ஈடாக மலேசியப் படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பெற்று வருகின்றது.
மொத்தத்தில், அக்டோபர் மாதம் மலேசியத் திரையரங்குகள் யாவும் தமிழ்த் திரைப்படங்களால் நிறைந்து திரைப்படத் திருவிழா போல் காட்சியளிக்கப் போவது உறுதி.
-ஃபீனிக்ஸ்தாசன்