மும்பை – நேற்றிரவு மும்பை விமான நிலைய மேலாளரைத் தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர், தன்னை விஜேஷ் குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, குண்டு வெடிப்பு நடத்துவதைப் பற்றிச் சிலர் உரையாடுவதைக் கேட்க நேர்ந்ததாகவும், அதன்படி மும்பை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் நட்சத்திர விடுதிக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாஜ் நட்சத்திர விடுதியின் மீது கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டில்லி, பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெரிய நாசவேலைக்குத் திட்டமிட்டிருப்பதை உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.
இதற்காக ஐஎஸ்ஐ, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ- முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் சில தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஏற்கனவே ஊடுருவி விட்டதாகவும், இன்னும் சிலர் டில்லி, பஞ்சாபிற்குப் பிரிந்து சென்று இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இவர்களுக்குத் தேவையான வெடிபொருட்கள் காஷ்மீரில் இருந்து டில்லி, பஞ்சாபிற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே டெல்லி, பஞ்சாப்,மும்பை, காஷ்மீர் முதலிய மாநிலங்களில் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.