சீனா,மார்ச்.12-வீடு விற்பனையின் போது விதிக்கப்படும் அதிக வரியை தவிர்க்க சீன தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்கின்றனர்.
சீனாவில், வீடு விற்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக அமலில் இருந்தாலும் கடுமையாக பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு சீன அரசு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது.
திருமணமாகாத தனி நபர்களுக்கு இச்சட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிவிதிப்பில் இருந்து தப்ப சீன தம்பதிகள் விவாகரத்து செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த வாரத்தில், ஒரே நாளில், 53 தம்பதிகளுக்கு ஷாங்காயில் உள்ள சாபே மாவட்ட திருமண அலுவலகம் விவாகரத்து வழங்கி சாதனை படைத்துள்ளது.
இது வழக்கமான நடைமுறை தான் என்றும் சட்டம் கடுமையாக உள்ளதால் மக்கள் விவாகரத்து செய்ய முடிவெடுக்கின்றனர் எனவும் ரியல் எஸ்டேட் வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வீடு விற்பனை செய்த பின்னர் அதே தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்துகொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.