மணிலா- புகைமூட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் ஃபிலிபைன்சின் தெற்கு மற்றும் மத்திய தீவுப் பகுதிகளில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
இதையடுத்து அப்பகுதிகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக நீடித்து வரும் புகைமூட்டம் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் பத்து பேர் பலியாகியுள்ளனர்.
அனைத்துலக நாடுகள் புகைமூட்டத்தைத் தணிக்க மேற்கொண்ட முயற்சிகள் பெரிய பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் ஃபிலிபைன்சில் நிலைமை மோசமடைந்துள்ளது.
“சுவாசக் கோளாறுகள் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் முகமூடி அணிந்திருப்பது நல்லது. நாட்டின் தெற்கு பகுதியில் மருத்துவமனைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று ஃபிலிபைன்ஸ் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஹெர்மினியோ கொலோமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு தீவுகளுக்கான ஆறு விமானச் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை புகைமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டன. கடந்த பத்து நாட்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் தாமதம் காரணமாகவும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்தோனேசிய காட்டுத்தீயால் புகைமூட்டம் ஏற்படுவதும், அதன் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் பாதிக்கப்படுவதும் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான். எனினும் இந்த ஆண்டு நிலவும் வறண்ட வானிலை காரணமாக புகைமூட்டம் மோசமடைந்துள்ளது.