குளுவாங்- மலையடிவார இடுக்கில் விழுந்த காருக்குள் சிக்கிய 68 வயது ஓட்டுநர் ஒருவர் 3 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டார். அவ்வழியே சென்ற இருசக்கர வாகனமோட்டி ஒருவர், வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதை சரியாக கணித்ததால், அந்த ஓட்டுநருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
விபத்தில் சிக்கியவர் வாடகைக்கார் ஓட்டுநர் ஜோஹர் காசிம். சம்பவத்தன்று அவர் தனது காரை பின்னோக்கி இயக்கியுள்ளார். அங்கு சாலையோர தடுப்பு இல்லாததால், சாலைப்பகுதி முடிந்து பள்ளத்தை நோக்கிச் செல்கிறோம் என்பதை அவர் உணரவில்லை.
பின்னோக்கிச் சென்ற கார், அப்படியே சரிந்து விழுந்தது. இதில் அங்குள்ள மலைப்பகுதியில் தண்ணீர் பாய்ந்ததால் ஏற்பட்ட சிறிய இடுக்கில் அவரது கார் சிக்கிக் கொண்டது.
இதில் ஜோஹருக்கு இடது காலில் பலத்த அடி ஏற்பட்டதால், அவரால் காரை விட்டு வெளியேறி, பள்ளத்தில் இருந்து மேலேறி வர முடியவில்லை. எனவே மலை இடுக்கில் பாய்ந்த தண்ணீரை மட்டுமே அவ்வப்போது குடித்து சமாளித்து வந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் 3 நாட்களுக்குப் பின்னர் விபத்து நிகழ்ந்த தாமான் ஸ்ரீ குளுவாங் பகுதியில் உள்ள ஜாலான் ஜெயா வழியே சென்ற இருசக்கர வாகனமோட்டி, சாலையோரம் ஒரு காரின் டயர் (சக்கர) அச்சைக் கண்டதும், ஏதோ விபத்து நிகழ்ந்திருப்பதை யூகித்துள்ளார்.
இதையடுத்து பள்ளத்தில் இறங்கிப் பார்த்தபோது ஜோஹர் காருக்குள் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தாமே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். எனினும் தனி மனிதராக அவரால் ஜோஹரை மீட்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து மீட்புக்குழுவினருக்கு அவர் தகவல் தெரிவிக்க, விரைந்த வந்து அக்குழுவினர் ஜோஹரை பத்திரமாக மீட்டனர்.