கோலாலம்பூர்- தன்னை ஏற்றிச் செல்ல வேண்டிய சொகுசுக் காரை நடிகர் ரஜினிகாந்த் கடத்திச் சென்றுவிட்டதாகத் தாம் கருதவில்லை என பிரபல மாடல் அழகி எம்பர் சியா தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கால் பதித்ததும், நடிகர் ரஜினிகாந்தை நீண்ட – சொகுசுக் கார் ஒன்று மலாக்காவுக்கு ஏற்றிச் சென்றது. இந்நிலையில் அந்த சொகுசுக் கார் ஓட்டுநர் தம்மால் மலாக்காவுக்கு வர இயலாது என்று கூறியபோதும், அவரை நிர்ப்பந்தித்து அங்கு செல்ல வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் அந்த சொகுசுக்கார் ரஜினியை அடுத்து, பிரபல மாடல் அழகி எம்பர் சியாவையும் விமான நிலையத்தில் இருந்து சன்வே பிரமிட்டுக்கு ஒரு விளம்பர நிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்லவிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
எம்பர் சியா (படம்) மலேசியாவின் பிரபல விளம்பர அழகிகளில் (மாடல்) ஒருவராவார்.
இதுகுறித்து கூறுகையில், “எனக்கான காரில் நடிகர் ரஜினி செல்வதை அறிந்ததும், எனக்கு கோபம் வரவில்லை. பரவாயில்லை என்றே நினைத்தேன். ஆனால் எனது பயண முகவர் இதுகுறித்து முன்கூட்டியே எனக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். நான் பயணம் செய்ய வேண்டிய காரை பிரபல பிரமுகர் ஒருவர் வலிய எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டபோது, அவர் (ரஜினி) அப்படிச் செய்திருக்க மாட்டார் என நினைத்தேன். நடிகர் ரஜினியை நான் பெரிதும் நம்புகிறேன், மதிக்கிறேன். அவர் யாருக்கும் இப்படியொன்றை செய்ய மாட்டார்,” என்றார் எம்பர் சியா.
வியட்நாமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பியிருந்தார் எம்பர் சியா. பின்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மாலை சுமார் 6.15 மணி முதல் இரவு 8.20 மணி வரை தன்னை அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்ட அந்த சொகுசுக் காருக்காக காத்திருந்தாராம்.
ஏனெனில் அந்தக் காரில் சென்று, முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்க இருந்தார். நிகழ்ச்சி நிரலின்படி, அவர் ஆடம்பர சொகுசுக் காரில் வந்திறங்க வேண்டும், அதை படம்பிடிக்க வேண்டும் என்பதே ஏற்பாடு.
எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தனக்கான காரை அலங்கரிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக சியா கருதியுள்ளார். இதனால் 2 மணி நேரம் விமான நிலையத்திலேயே அவர் பொறுமையாகக் காத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
“ரஜினிகாந்த் முதிர்ச்சியானவர். அவர் இப்படியொரு செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. எனது பயண முகவர் விஷயத்தை தெளிவுபடுத்தி இருந்தால் சிக்கல் இருந்திருக்காது” என்று தெரிவித்துள்ள எம்பர் சியா, வேறு வழியின்றி விமான நிலையத்தில் இருந்து வாடகைக் காரில் ஏறி, தாம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.