கோலாலம்பூர் – கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் தயாரிப்பான விண்டோஸ் 10-ஐ வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை மைக்ரோசாப்ட் நிவர்த்தி செய்தது. அதுவும், விண்டோஸ் 8 எனும் ஆகப் பெரும் தனது தவறுக்கு பிராயச்சித்தமாக, அசல் பதிப்பை வைத்திருக்கும் பயனர்கள் இலவசமாக விண்டோஸ் 10-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.
பயனர்கள் மத்தியில் விண்டோஸ் 10 பெரும் வரவேற்பை பெற்று இருந்தாலும், விண்டோஸ் 10-ஐ இலவசமாக பெற வேண்டுமானால், முந்தைய விண்டோசின் அசல் பதிப்பை வைத்திருக்கும் பயனர்கள் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தது. முன்பதிவுகளின் அடிப்படையில், விண்டோஸ் 10 மேம்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், பயனர்களுக்கு அத்தகைய சிரமத்தையும் கொடுக்கக் கூடாது என்பதற்காக, அசல் பதிப்பு வைத்திருக்கும் பயனர்களின் கணினிகளில் விண்டோஸ் 10 பதிப்பு தன்னிச்சையாக பதிவிறக்கம் செய்வதற்கான திட்டத்தை மைக்ரோசாப்ட் பரிசீலனை செய்து வருகிறது.
இப்படி மேம்படுத்தப்படும் விண்டோஸ் 10, முதல் 31 நாட்களுக்கு கட்டாயமற்றதாக (Optional) இருக்கும். ஒருவேளை 31 நாட்கள் முடிவில், விண்டோஸ் 10 பிடிக்கவில்லை என்றால், மீண்டும் பழைய பதிப்பையே வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்த மூன்று வருடங்களுக்குள், விண்டோஸ் 10 பயனர்களின் எண்ணிக்கையை 1 பில்லியனாக மாற்றுவதற்கு பாடுபட்டு வரும் நாதெல்லாவின் இந்த முயற்சி அவருக்கு பலன் அளிக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.