சென்னை – மது ஒழிப்பிற்கு எதிராகவும், டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாடல்களை இயற்றி அதனை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்த பாடகர் கோவனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.
திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவன் என்பவர், மது ஒழிப்பிற்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவரது குழுவினர், “ஊருக்கொரு சாராயம் தள்ளாடுது தமிழகம்… ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்” எனும் பாடலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனை அவர்கள் வீதி நாடகமாக நடத்தி வந்ததால், பொது மக்கள் மத்தியிலும், எதிர்க் கட்சினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் காவல்துறை அவரை நேற்று நள்ளிரவு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மக்கள் பிரச்னைக்கு எதிராக குரல் கொடுத்த கோவன் கைது செய்யப்பட்டுள்ளதால் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் ஜனநாயகத்தின் குரல்வளையை ஜெயா அரசு நெறிப்பதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டங்களும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.