கோலாலம்பூர் – அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவு மக்கள் மத்தியிலும் வெளிவரத் தொடங்கியுள்ளது. அம்னோவில் எதையும் துணிந்து பட்டவர்த்தனமாகப் பேசும் சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ், அடுத்த கட்சித் தேர்தல் வரை மொகிதின் அம்னோ துணைத் தலைவராக நீடிப்பதற்கு தான் உறுதியுடன் ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
“எனது கருத்தை அடுத்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் நான் வலியுறுத்துவேன். அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படாமல் இருக்க என்னால் ஆன அனைத்தையும் செய்வேன். 70வது ஆண்டு நிறைவை எட்டப் போகும் அம்னோவில் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“மொகிதின் அடுத்த கட்சித் தேர்தல்வரை அம்னோவின் துணைத் தலைவராக நீடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றும் நஸ்ரி உறுதியுடன் கூறினார். நஸ்ரி பேராக்கில் உள்ள பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமாவார்.
இதற்கிடையில், அடுத்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் டிசம்பரில் நடைபெறும் என்றும் அதற்கு முன்பாக மொகிதின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் தகவல் ஊடகங்கள் ஆருடங்கள் வெளியிட்டுள்ளன.