கோலாலம்பூர்- கோலாலம்பூர் சிட்டி சென்டர் (கே.எல்.சி.சி) 2ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று பரவிய தகவல் காரணமாக அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அங்கு கேட்பாரற்றுக் கிடந்த 4 பைகளில் வெடிகுண்டுகள் இருக்கலாம் எனக் கருதப்பட்டதால் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
சூரியா கே.எல்.சி.சி, வளாகத்தின் நுழைவாயிலில் நேற்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்தப் பைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து டாங் வாங்கி காவல்துறை தலைமையகத்தில் இருந்து வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் சிறப்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து 4 பைகளையும் அக்குழுவினர் சோதனையிட்டதில் அவற்றுள் ஆடவர்களுக்கான சில துணிகள் மட்டுமே இருந்தன. இதனால் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
முன்னதாக பைகளைக் கைப்பற்றிய போலிசார், அவற்றை இரட்டைக் கோபுர வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பாக கொண்டு சென்றனர். பின்னர் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் நடைமுறையைப் பின்பற்றி அப்பைகளைச் சோதனையிட்டனர்.
“சந்தேகத்துக்குரிய பைகளில் வெடிகுண்டுகள் ஏதுமில்லை. அவற்றுள் சில துணிமணிகள் மட்டுமே இருந்தன” என்று கோலாலம்பூர் சிஐடி பிரிவு தலைவர் டத்தோ சைனுடின் அகமட் தெரிவித்துள்ளார்.