கோலாலம்பூர் – மஇகா கடந்த ஓராண்டுக்கும் மேலாக சங்கப் பதிவகம்-நீதிமன்றம் என இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில்,
கட்சியும் தலைமைத்துவப் போராட்டத்தினால் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிளைத் தலைவர்கள் அணி பிரிந்து சிதறுண்டு கிடந்த சூழ்நிலையில்,
மஇகாவைக் கட்டம் கட்டமாக வழிநடத்தி, கட்சியின் மறு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து, நேற்று மஇகாவின் 67வது பொதுப் பேரவையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றார் மஇகாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்.
அதுமட்டுமல்லாமல், தேசிய நிலையிலான கட்சித் தேர்தல்களை வெளிப்படைத் தன்மையுடன், நியாயமாகவும், பாரபட்சமின்றியும் நடத்தி மஇகாவினரின் ஒருமித்த பாராட்டுதல்களையும் பெற்றிருக்கின்றார் சுப்ரா.
மஇகா மீண்டும் சரியான பாதையில் சட்டரீதியில் இயங்குவதற்கு பாடுபட்ட டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இதற்காக, பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் மஇகாவுக்கு மீண்டும் சில அரசியல் சலுகைகளை வழங்கவிருப்பதாகவும், அதில் முதல் கட்டமாக இரண்டு புதிய துணை அமைச்சர்களுக்கான வாய்ப்பை வழங்கலாம் எனவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு துணையமைச்சர்கள் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு துணையமைச்சராவது முதலில் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய துணையமைச்சர்கள் யார்?
ஏற்கனவே, இரண்டு முழு அமைச்சர்களைக் கொண்டிருந்த மஇகாவில், அமைச்சராக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நீக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு மாற்றாக இதுவரை இரண்டாவது அமைச்சர் நியமிக்கப்படவில்லை.
இருப்பினும், முழு அமைச்சர் என்பதற்குப் பதிலாக இரண்டு துணையமைச்சர்களை மஇகாவுக்கு வழங்க, தேசிய முன்னணி தலைவருமான நஜிப் எண்ணம் கொண்டிருப்பதாகவும்,
அதன்மூலம் மேலும் பரவலான ஆதரவை இந்திய சமுதாயத்திலிருந்து பெற முடியும் என்றும், மஇகாவின் அடுத்த கட்ட தலைவர்களுக்குப் போதிய பயிற்சி கொடுத்து அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்க முடியும் என்றும் நஜிப் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சில மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சனை என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக தற்போது யாருமில்லை என்பதால், மேலவை உறுப்பினர்களாக அதாவது செனட்டர்களாக இருப்பவர்கள்தான் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட முடியும் என்ற சூழ்நிலை நிலவுகின்றது.
இந்த நிலையில் தற்போது செனட்டர்களாக இருப்பவர்களில் துணையமைச்சர்களாகும் வாய்ப்புள்ளவர்களாக டத்தோ விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ குணசேகரன் (பகாங்) ஆகியோர் பார்க்கப்படுகின்றனர்.
விக்னேஸ்வரன் துணையமைச்சரா?
இவர்களில் விக்னேஸ்வரன் (படம்) முதலாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவருக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர் தற்போது செனட்டராகவும் இருப்பதால் உடனடியாக அவரால் துணையமைச்சராகப் பதவியேற்கவும் முடியும்.
இரண்டு துணையமைச்சர்கள் மஇகாவுக்கு வழங்கப்படும் என்றால் அடுத்த நிலையில் மூன்றாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோ ஜஸ்பாலுக்கு அந்த வாய்ப்பு செல்லக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மஇகா சார்பாக, மற்ற இரண்டு செனட்டர்களாக இருப்பவர்கள் டத்தோ வி.சுப்ரமணியம் (பாராட் மணியம்), சிவபாக்கியம் ஆகியோர் முன்னாள் தலைவர் பழனிவேல் அணியில் இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, அவர்களுக்குத் துணையமைச்சர் வாய்ப்பு கிடைக்காது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
தேவமணி, டி.மோகன் நிலைமை என்ன?
நேற்று நடந்த மஇகா பொதுப் பேரவையில் புதிதாக தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவமணியுடன், பிரதமர் நஜிப்…
பதவி முறைப்படி பார்த்தால், இதில் மஇகா தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்குத்தான் துணையமைச்சராகும் முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அவர், தற்போது பேராக் சட்டமன்றத்தின் சபாநாயகராக இருக்கின்றார். தேசியத் துணைத் தலைவர் போட்டிக்கான பிரச்சாரத்தின் போது, மஇகா தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வேன் என பகிரங்கமாக அறிவித்திருந்தார் அவர்.
எனவே, அவர் அவ்வாறு ராஜினாமா செய்வாரா அல்லது சபாநாயகராகவே தொடர்வாரா என்பது இன்னும் தெரியவில்லை. அப்படியே அவர் அடுத்த துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்றாலும், முதலில் செனட்டராகப் பதவியேற்க வேண்டும்.
டத்தோ டி.மோகனுக்கும் (படம்) இதே நிலைமைதான்!
முதலில் செனட்டராக நியமிக்கப்பட்ட பின்னர்தான் இரண்டாவது தேசிய உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.மோகன் துணையமைச்சராக நியமிக்கப்பட முடியும்.
ஆனால், தற்போது மஇகாவில் பதவி வகிக்கும் செனட்டர்களின் பதவிக் காலம் எல்லாம் அடுத்த ஆண்டுதான் முடிவடைகின்றது.
புதிய, கூடுதல் செனட்டர் பதவிகள் கிடைக்கலாம்!
இருப்பினும், மஇகாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள செனட்டர் பதவிகளின் எண்ணிக்கை 6 என்றும் அதில் இன்னும் ஒரு செனட்டருக்கான நியமனம் இதுவரையில் பழனிவேல் செய்யாமல் இருந்தார் என்றும், இனி அந்த ஒரு செனட்டர் பதவி மஇகாவுக்கு கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கின்றது என்றும் மஇகாவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் 2013ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலின்போது, பேராக் மாநிலத்தில் இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றை மஇகா அம்னோவுக்காக விட்டுக் கொடுத்தது. அதற்குப் பதிலாக, மஇகாவுக்கு ஒரு செனட்டர் பதவி வழங்கப்படும் என தேசிய முன்னணி உறுதியளித்துள்ளது என்றும் அப்போது பழனிவேல் அறிவித்திருந்தார்.
ஆனால், இதுவரை அந்த செனட்டர் பதவியும் மஇகாவுக்கு வழங்கப்படவில்லை. இந்த செனட்டர் பதவியையும் திரும்பப் பெறுவது அல்லது, அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் மஇகாவுக்கு ஒதுக்குவதற்காக கோரிக்கை விடுப்பது என்ற முடிவையும் மஇகா தலைமைத்துவம் எடுக்கலாம் என்றும் இன்னொரு கோணத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
தீபாவளிக்கு முன்னதாகவோ, தீபாவளி முடிந்த பின்னரோ, பிரதமர் நஜிப்புடன் டாக்டர் சுப்ரா பேச்சுவார்த்தை நடத்தி, மஇகா சார்பிலான துணையமைச்சர் நியமனங்கள் தொடர்பிலான முடிவுகளை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, தற்போது செனட்டர் பதவிகளில் இருப்பவர்களைக் கொண்டு, மஇகாவுக்குக் கிடைக்க வேண்டிய துணையமைச்சர் பதவி நிரப்பப்படுமா?
அல்லது,
புதிய செனட்டர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் துணையமைச்சர்களாக நியமிக்கப்படுவார்களா?
மஇகாவுக்கு கிடைக்கப் போவது ஒரு துணையமைச்சரா? அல்லது இரண்டு துணையமைச்சர்களா?
என்பது போன்ற கேள்விக் குறிகளோடு மஇகாவினர் காத்திருக்கின்றனர்!
-இரா.முத்தரசன்