செர்டாங் – நேற்று பிற்பகல் நடைபெற்ற மஇகா 67வது பொதுப் பேரவையில் மஇகாவின் 9வது தேசியத் தலைவராக தனது முதல் கொள்கையுரையை ஆற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்திய சமுதாயம், மஇகா குறித்த பல அரசியல் விவகாரங்களை பிரதமர் முன்னிலையில் எடுத்துக் கூறினார்.
மஇகா பொதுப் பேரவைக்கு வருகை தரும் பிரதமரை வரவேற்கும் டாக்டர் சுப்ரா…
அரசியல் ரீதியாக மஇகாவை உருமாற்றுவது அவரது கொள்கையுரையில் மையக் கருத்தாக இழையோடியது. நேரம் கருதி, தனது உரையை மலாய் மொழியில் மட்டும் வழங்குவதாகக் கூறிய சுப்ரா, தனது உரையின் முக்கிய நோக்கம் அதன் உள்ளடக்கம் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்வதுதான் என்றும் கூறியிருந்தார்.
அவரது விரிவான கொள்கை உரையின் ஆங்கில, மலாய், தமிழ் வடிவங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு சிறு நூலாக அச்சடிக்கப்பட்டு பேராளர்களிடத்தில் விநியோகிக்கப்பட்டன.
கட்சியை உருமாற்றுவோம்
இரண்டு முனைகளில் செயல்படுவதை உறுதி செய்யும் வண்ணம் கட்சியைத் தயார்ப்படுத்த தாம் முனைந்துள்ளதாக தனது உரையில் தொடக்கத்தில் கூறிய சுப்ரா,
(1) அரசியல் ரீதியாக 2018ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் மஇகா அத்தியாவசியமானக் கட்சியாக உருவெடுக்க வேண்டும்;
(2) இந்தியர்களின் தற்போதைய பொருளாதார, சமூக சீர்கேடுகளிலிருந்து விடுபடச் செய்து, அவர்களை மேலும் உயர்த்துவதற்கான இன்னும் விரிவான செயல்திட்ட அட்டவணை ஒன்றை மேலும் முனைப்புடன் செயல்படுத்துவது;
அரசியல் ரீதியான பல சீர்திருத்த மாற்றங்கள், உருமாற்றங்கள் ஆகியவற்றின் வழியாக, மேற்கண்டவற்றை செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.
“முதல் கட்டமாக, மஇகாவின் அமைப்பு முறைகளை மேலும் ஜனநாயக முறைப்படி மாற்றியமைத்து, அதன் மூலம் கட்சியின் அதிகாரங்களை இன்னும் கூடுதலாக அதன் அடிமட்ட உறுப்பினர்கள் வசம் ஒப்படைக்கப்படும். இந்த ஜனநாயகப்படுத்தும் நடைமுறைகள் சுமுகமாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, அதற்காக, மஇகாவின் அமைப்பு விதிகள் மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம், மலேசிய இந்திய சமுதாயத்தின் பெரும்பான்மையானவர்கள் மஇகாவின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும் சூழ்நிலை உருவாக்கப்படும் ” என்றும் சுப்ரா தனதுரையில் தெரிவித்தார்.
மஇகாவை அனைவருக்காகவும் திறந்து விடுவோம்
“மஇகாவின் போராட்டங்களில் அக்கறை கொண்டு, தங்களின் பங்களிப்பை வழங்க விரும்புபவர்களுக்காக, அவர்களும் நமது கட்டமைப்பில் இடம் பெற்று, பங்கு பெறும் வண்ணம் ஒரு திறந்தமயமான நடைமுறையை அவர்களுக்காக உருவாக்கவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் அவர்களின் அறிவாற்றல், சிந்தனைத் திறன்கள் மற்றும் திறமைகள் இந்திய சமுதாயத்தின் பொது நன்மைக்காக உள்வாங்கப்பட்டு, பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள் உருவாக்கப்படும்” என்றும் சுப்ரா, கட்சிக்கான தனது உருமாற்றத் திட்டங்களில் ஒன்றாக அறிவித்தார்.
மற்ற சிறு கட்சிகளை ஒன்றாக இணைப்போம்
இந்திய சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவ நிலையைப் பொறுத்தவரை, இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதப்பதாகக் கூறிக் கொண்டு, பல்வேறு சிறு சிறு கட்சிகளாக சிதறுண்டு அவர்கள் இருப்பது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கின்றது என்றும் தெரிவித்த சுப்ரா, நாட்டின் மிகப் பழமையான, மிகப் பெரிய கட்சி என்ற முறையில், மற்ற கட்சிகளுடன் இணைந்து ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்க ஒரு வெளிப்படையான கருத்துப் பரிமாற்றக் களம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
இதற்காக மற்ற கட்சிகளை எங்களோடு ஒன்றிணைவதற்கு அவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுப்போம்.
மலேசிய இந்திய ஆலோசனை மன்றம் அமைக்கப்படும்
அத்துடன், நமது கட்சிக்கும், சமுதாயத்திற்கும் இடையே உறவுப் பாலமாகச் செயல்பட மலேசிய இந்திய ஆலோசனை மன்றம் ஒன்றையும் அமைக்கவிருப்பதாக சுப்ரா தனது கொள்கையுரையில் குறிப்பிட்டார்.
கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை திரும்பவும் சேர்ப்போம்
அது மட்டுமல்லாமல், மாறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளினால், நடந்து முடிந்த கட்சியின் மறு தேர்தல்களில் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருந்த கட்சியின் எல்லா நிலைகளிலும் இருக்கும் நமது மஇகா உறுப்பினர்கள் இந்த மாநாடு முடிவடைந்ததும், அவர்கள் மீண்டும் கட்சிக்குள் திரும்பி வந்து சேர்வதற்கு அவர்களுக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்களும் நமது கட்சியோடு இணைந்து, கட்சி நடவடிக்கைளில் மீண்டும் அவர்கள் பணியாற்றுவதையும் நாங்கள் உறுதி செய்வோம் என்றும் சுப்ரா பிரதமர் முன்னிலையில் அறிவித்தார்.
-செல்லியல் தொகுப்பு