Home Slider “ஓட்டு போடும்போது விரலில் ஏற்படும் கறை போதும்” – கமல்ஹாசன் சுவாரசியப் பேச்சு!

“ஓட்டு போடும்போது விரலில் ஏற்படும் கறை போதும்” – கமல்ஹாசன் சுவாரசியப் பேச்சு!

643
0
SHARE
Ad

Kamalசென்னை – நடிகர் கமல்ஹாசனின் 61-வது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் தனது மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பிறகு மேடையேறி கமல், “நான் ஒரு பகுத்தறிவாளன். நாத்திகன் அல்ல. அதேபோல் நான் பெற்ற பகுத்தறிவும் அரசியல் மூலமாக கிடைக்கவில்லை. நாளைக்கே ஒரு சாமியார் அதிக சக்திகளோடு என் முன் வந்து நின்றால், அவரை வரவேற்பேனே தவிர, கும்பிட மாட்டேன். அதே சமயம், சுனாமி வந்தபோது எங்கே போனீர்கள் என்றும், ஏழ்மை வந்தபோது எங்கே சென்றீர்கள் என்றும் கண்டிப்பாக கேட்பேன்.”

“நான் ஒரு காலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டவன் தான். ஆனால், தற்போது என்னைவிட பெரிய உருவங்களை சாப்பிடுவதில்லை. மாட்டுக்கறி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். ஆனால், இன்னும் 30 ஆண்டுகளில் பூச்சிகளை உண்ணும் நிலை வரும்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “நான் இதுபோன்று பேசுவதாலும், நலத்திட்டங்கள் வழங்குவதாலும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று பேசுகிறார்கள். ஆனால், நான் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டேன். ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஓட்டு போடும்போது விரலில் ஏற்படும் கறை போதும், வேறெந்த கறையும் வேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மதவாதப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், தமிழ் திரைப்படக் கலைஞர்களில் கமல் மட்டுமே இது தொடர்பான தனது கருத்தினை பொதுவெளியில் தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.