கோலாலம்பூர்- அண்மைக் காலங்களில் துன் மகாதீர் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பதிலளிக்க இதுவே சரியான நேரம் என சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலி வலியுறுத்தி உள்ளார்.
தனது கேள்விகளுக்கு எல்லாம் பிரதமர் நஜிப் தரப்பில் மவுனச் சுவர் ஒன்றையே மகாதீர் இதுவரை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அஸ்மின் அலி, பதில்கள் கிடைக்கும் வரை மகாதீர் கேள்விகள் எழுப்புவதை நிறுத்தப் போவதில்லை என கூறியுள்ளார்.
“நஜிப் பதில்களை அளிக்காத வரை இந்த விவகாரங்கள் நீடிக்கவே செய்யும். மலேசிய குடிமகன் என்ற வகையில் கருத்துக்களை தெரிவிக்கவும் கேள்வி எழுப்பவும் அவருக்கு (மகாதீர்) உரிமையுண்டு. குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விளக்கங்களையும், உண்மைகளையும் அளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்” என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
எனினும் எது தொடர்பான ‘குற்றச்சாட்டுகள்’ என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனினும், மகாதீர் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று மட்டும் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று புதன்கிழமை கோலாலம்பூரில் ஊழலுக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய மகாதீர், அரசாங்கத்தில் உயர்மட்ட அளவில் நடக்கக்கூடிய ஊழல்கள் குறித்து தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.