கோலாலம்பூர் – நமது நாட்டின் அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவர் பிபிபி கட்சியின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ கேவியஸ். துணையமைச்சராக இருந்த காலத்தில் அம்பாங் நகரசபை அதிகாரிகள் மீது துணிச்சலாகக் குற்றம் சுமத்தி அவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட போராடியவர்.
தனது வரிசை எண் அழைக்கப்படுவதற்காக மக்களோடு மக்களாக காத்திருக்கும் கேவியஸ்..
தற்போது சாலைப் போக்குவரத்து இலாகாவின் சேவைத் தரம் குறித்து அவர் பாராட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தலைநகர் வங்சா மாஜூவில் உள்ள சாலைப் போக்குவரத்து இலாகாவிற்கு தனது கார் எண்ணை மாற்றுவதற்கு சென்றது குறித்து தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கேவியஸ் பின்வருமாறு ஆங்கிலத்தில் சுவாரசியமாக விவரித்துள்ளதன் தமிழாக்கம்:-
“திங்கட்கிழமை காலை வங்சா மாஜூவில் உள்ள சாலைப் போக்குவரத்து இலாகாவுக்கு எனது கார் எண்ணை மாற்றுவதற்கு சென்றேன். நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள். சொல்லியிருந்தால் அதிகாரிகள் எனது அலுவலகம் வந்து இந்தப் பணியை முடித்துத் தந்திருப்பார்கள் என என்னிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால், வழக்கமாக இந்தப் பணி எப்படி செய்யப்பட வேண்டுமோ அப்படியே நான் இலாகா சென்று வரிசையில் நின்று செய்து முடிக்க விரும்புகின்றேன் எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டேன்.
அதைத்தானே பொதுமக்களும் விரும்புகின்றார்கள். அதாவது அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தில் நேரடியாக இறங்கி பணியாற்ற வேண்டும் என்றுதானே மக்களும் விரும்புகின்றார்கள் அல்லவா? ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் எனது மொத்த வேலையும் 20 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. இதுபோன்ற சேவைத் தரத்தை சாலைப் போக்குவரத்து இலாகா தொடர்ந்து நிலைநிறுத்தி வரவேண்டும்”
-என்று பதிவிட்டு சாலைப் போக்குவரத்து இலாகாவையும் பாராட்டியுள்ளார் கேவியஸ்.
சாலைப் போக்குவரத்து இலாகாவின் அதிகாரியை சிறந்த சேவை வழங்கியதற்காகப் பாராட்டும் கேவியஸ்
-செல்லியல் தொகுப்பு