இலண்டன் – பிரிட்டனுக்கான வரலாற்றுபூர்வ வருகையை மேற்கொண்டு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலண்டன் வந்து சேர்ந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேலும் கூடுதலாக வணிக வாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இலண்டன் விமான நிலையத்தில் மோடிக்கு வரவேற்பு வழங்கப்படுகின்றது..
மோடியின் மூன்று நாள் வருகையின்போது ஏறத்தாழ 10 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (15 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான வணிக ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் இடையில் கையெழுத்திடப்படலாம் என தகவல் ஊடகங்கள் கணித்துள்ளன.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றவிருக்கின்றார். தொழில்துறை தலைவர்களுடனான சந்திப்புகளையும் மோடி நடத்தவிருக்கின்றார்.
இலண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் “பிரிட்டனுக்குப் புறப்படுகின்றேன். இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை இந்த வருகை வலுப்படுத்தும் என்றும், இந்தியாவுக்கு மேலும் கூடுதலான முதலீடுகளைக் கொண்டுவர முடியும் என்றும் நம்புகின்றேன்” என மோடி பதிவிட்டுள்ளார்.
மோடி வருகையின் உச்சகட்டமாக அமையப் போவது நாளை வெள்ளிக்கிழமை பிரசித்தி பெற்ற வெம்ப்ளி அரங்கில் சுமார் 60 ஆயிரம் பேர் முன்னிலையில் மோடி ஆற்றப் போகும் உரையாகும். இந்த உரையின் போது மோடியை வரவேற்கும் உரையை பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் ஆற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலண்டன் வந்தடைந்தவுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் இலண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய படங்களை வெளியிட்ட மோடி, “இலண்டன் வந்தடைந்து விட்டேன். இந்தியா-பிரிட்டன் உறவுகள் எனது வருகையால் மேலும் வலுப்பெறும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.