Home Featured நாடு இந்திய வம்சாவளி மாணவர் நிதிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு!

இந்திய வம்சாவளி மாணவர் நிதிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு!

714
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையின் போது அவர் விடுத்த அறிவிப்புகளில் முக்கியமானதாகவும், மலேசிய இந்திய சமுதாயத்திற்குப் பயன்தரக்கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுவது மலேசிய இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதிக்காக  ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும் என அவர் அறிவித்திருப்பதுதான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மைன்ஸ் கண்காட்சி மையத்தில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றியபோதே மோடி இந்த அறிவிப்பைச் செய்தார்.

modi 3மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் மோடி உரையாற்றும் காட்சி

#TamilSchoolmychoice

மலேசிய இந்திய மாணவர்களுக்காக மலேசிய இந்தியத் தூதரகம் ஆண்டுதோறும் வழங்கி வரும் கல்வி உதவி நிதிக்கு நூற்றுக்கணக்கானோர் ஆண்டுதோறும் விண்ணப்பிக்கின்றனர்.

ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட முடிவதில்லை.

இந்த நிதிக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகின்றது என்பதைத் தான் உணர்ந்திருப்பதாகக் கூறிய மோடி, இந்த நிதியில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 4.37 மில்லியன் ரிங்கிட்) சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருக்கின்றார்.

இந்தியா மாணவர் கல்விநிதி அறக்கட்டளை என்று அழைக்கப்படும் இந்த நிதி 1954ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும்.

மோடியின் வருகையின் காரணமாக மலேசிய இந்திய மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு கல்வி உதவி நிதி வாய்ப்பாக இது பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதலான மலேசிய இந்திய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மோடியின் மற்ற முக்கிய அறிவிப்புகள் – கம்பாரில் இரண்டாம் உலகப் போர் நினைவு மையம்

இரண்டாவது உலகப் போரின்போது, பேராக், கம்பார் என்னும் நகரில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஆதரவாகப் போரிட்டு மடிந்த இந்தியப் படையினரின் நினைவாக அங்கு இரண்டாம் உலகப் போர் நினைவு மையம் ஒன்றை நிர்மாணிக்க இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாகவும், மலேசிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மோடி மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில், இந்திய வம்சாவளியினரிடையே  உரை நிகழ்த்தியபோது மோடி அறிவித்தார்.

இந்திய கலாச்சார மையம் – இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மையம்

மோடியின் மற்ற அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று, கோலாலம்பூரில் இயங்கி வரும் இந்தியத் தூதரகத்தின் கலாச்சார மையம் இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மையம் என அழைக்கப்படும் என்ற அறிவிப்பாகும்.

அண்மையக் காலமாக மோடியின் பாஜக அரசாங்கம் நேதாஜியின் தியாகங்களுக்கும், இந்திய சுதந்திரப் போரில் அவரது பங்களிப்புக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இந்த பெயர் மாற்றம் கருதப்படுகின்றது. அதிலும் குறிப்பாக நேதாஜியின் இந்திய தேசிய இராணுவ வரலாற்றில் அந்தக் கால மலாயா முக்கியப் பங்கு வகித்தது.

சுங்கைப்பட்டாணி காந்தி நினைவு மண்டபத்திற்கு காந்தி சிலை 

சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தின் நிர்மாணிப்பைப் பாராட்டிய மோடி, மகாத்மா காந்தி மலேசியாவுக்கு வந்ததில்லை என்றாலும், மலேசிய இந்தியர்கள் அவரைப் பார்த்ததில்லை என்றாலும், அவருடைய தியாகங்களை நினைவுகூர்ந்து அவருக்காக நினைவு மண்டபம் எழுப்பியிருப்பதைப் பாராட்டினார்.

அந்த ஈடுபாட்டைக் கௌரவிக்கும் வகையில் மகாத்மா காந்தியின் அரை உருவச் சிலை ஒன்றை இந்திய அரசாங்கம் சுங்கைப்பட்டாணி காந்தி நினைவு மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட, வழங்கும் என்ற அறிவிப்பையும் மோடி செய்தார்.

-செல்லியல் தொகுப்பு