இஸ்லாமாபாத் – இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) நேற்று மாலை திடீரென இஸ்லாமாபாத் சென்று சேர்ந்துள்ளார். அங்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரையும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார்.
பாகிஸ்தானின் உயர் இராணுவ அதிகாரிகளையும் சுஷ்மா சந்திப்பார்.
பாரதீய ஜனதாவின் அரசாங்கம் கடந்தாண்டு பதவியேற்ற பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ‘ஹார்ட் ஆஃப் ஆசியா’ (Heart of Asia) எனப்படும் அமைச்சர் நிலையிலான மாநாட்டிலும் சுஷ்மா கலந்து கொள்வார்.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டின்போது நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் சில நிமிடங்கள் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
அதன் பயனாக, பின்னர் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சந்தித்து, பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்தனர்.
அதனை அடுத்து தற்போது சுஷ்மா சுவராஜின் பாகிஸ்தான் வருகை அமைந்துள்ளது.
“இருநாடுகளும் தங்களுக்கிடையிலான உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான முக்கிய செய்தியோடு வந்திருக்கின்றேன்” என சுஷ்மா, இஸ்லாமாபாத் வந்தடைந்ததும் தெரிவித்துள்ளார்.