நாளைக் காலை நடைபெறும் பேச்சுவார்த்தையில், மஇகா சார்பாக விக்னேஸ்வரனும், பழனிவேல் தரப்பில் சோதிநாதனும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சந்திப்பில் மற்றவர்களும் கலந்து கொள்வார்களா அல்லது இவர்கள் இருவருக்கும் இடையில் மட்டும்தான் பேச்சு வார்த்தைகள் தொடருமா என்பது குறித்து மேல்விவரங்கள் பெற முடியவில்லை.
பிற்பகலில் இந்தப் பேச்சு வார்த்தை குறித்த டத்தோ சோதிநாதன் தரப்பினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
#TamilSchoolmychoice
நேற்றைய பேச்சு வார்த்தையின் முடிவில் இருதரப்புக்கும் இடையில் பொதுவான தீர்வுகளைக் காண முடியவில்லை என்றும் அதன் காரணமாகவே, நாளையும் பேச்சு வார்த்தை தொடர்வதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சிக்குள் மீண்டும் திரும்புவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டே, இன்னொரு புறத்தில் சங்கப்பதிவகம்-பழனிவேல் தரப்பு – இடையிலான முடிந்து போன வழக்கு விவகாரங்களும் சேர்த்து சிண்டு முடிக்கப்படுவதால், பேச்சுவார்த்தையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகள் வேட்புமனுத் தாக்கல்களைச் செய்வதற்கான தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
கட்சிக்கு வெளியே நிற்பவை வெறும் 800 கிளைகள்தான் என்றும் எங்கே அந்த 1,800 கிளைகள்? பட்டியலைக் காட்ட முடியுமா என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் நேற்று பதில் அறிக்கை விடுத்திருந்தார்.