கோலாலம்பூர்- பிறரைக் குறை கூறி அரசியல் பிழைப்பு நடத்துவது டான்ஸ்ரீ கேவியஸ் போன்றவர்களுக்கு அழகல்ல என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோ முருகையா அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் மஇகாவை குறை கூறுவதற்கான எந்தவிதத் தகுதியும் கேவியசுக்கு கிடையாது என அவர் கூறியுள்ளார்.
இந்திய சமுதாயத்துக்கான நிதி மஇகா மூலமாக வழங்கப்பட்டது என்றும், மஇகா இந்திய சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளை சரிவர ஆற்றவில்லை என்றும் கேவியஸ் மனம்போன போக்கில், அடிப்படை ஆதாரமற்ற ஒரு கருத்தை கூறியுள்ளார். அவரது இந்த பொறுப்பற்ற, கண்மூடித்தனமான கருத்துக்கு மஇகாவைச் சேர்ந்த பலரும் உரிய வகையில் பதிலடி கொடுத்து வருகின்றார்கள்.
“பொதுவெளியில் கேவியசின் முகத்திரையை பலரும் கிழித்துப் போட்டு வரும் நிலையில், மேலதிகமாக நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. கேவியஸ் கூறியுள்ள கருத்து உண்மைத் தன்மையற்றது என்பதுடன் பிதற்றலானதும் கூட. மஇகா செய்து வந்துள்ள மக்கள் பணிகள் குறித்து வரலாறு நமக்கு எடுத்துச் செல்லும். நாடு சுதந்திரம் பெற்றது முதற்கொண்டு மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இந்திய சமுதாயத்துக்கு கலங்கரை விளக்காக செயல்பட்டு வருவது மஇகா தான் என்பது, வரலாற்று கல்வெட்டுகளில் பதிக்கப்பட்ட அசைக்க முடியாத உண்மை” என்றும் முருகையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“மஇகாவில் பிரச்சினை நிலவுவதாகக் கூறுவதற்கு முன் கேவியஸ், தான் தற்போது பொறுப்பேற்றுள்ள கட்சியின் நிலை குறித்து பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்ப்பது அவருக்கும் நல்லது, அக்கட்சிக்கும் நல்லது. முன்பு பிபிபி கட்சிக்கு உண்மையாக உழைத்து, அரசாங்கத்தில் துணை அமைச்சராக பொறுப்பு வகித்து, சமுதாயத்துக்கு நான் ஆற்றிய கடமைகள் குறித்து மக்கள் நன்கறிவர். ஆனால் உண்மையாக உழைப்பைச் சிந்திய பலரை அவர் கட்சியில் இருந்து வேரறுத்தார் என்பதே கடந்த காலத்து உண்மை. ஹிட்லர் பாணி தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒருவர், ஜனநாயகம் ஓங்கித் தழைக்கும் மஇகா போன்ற கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பது வேடிக்கையானது, விந்தையானது, விஷமத்தனமானது” என்றும் முருகையா சாடியுள்ளார்.
நேற்றைய பிபிபி மாநாட்டில் கேவியசுடன் துணைப் பிரதமர் சாஹிட் (வலது) தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் (இடது)
முருகையா பிபிபி கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவராகவும் பணியாற்றியவராவார்.
“தனது கட்சியை ஒட்டுமொத்த மலேசிய சமூகத்துக்காக பாடுபடும் பல இனக் கட்சி என்று முதலில் கூறிக்கொண்ட கேவியஸ், பின்னர் பிபிபியை இந்தியர்களுக்கான கட்சி என்று மாற்றிக் கூறியது ஏன்? அப்படியே இந்தியர் கட்சி என்றாலும் கேவியஸ் இந்திய சமுதாயத்துக்காக செய்தது என்ன? அரசியல் நடத்துவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லாத நிலையில், தேவையின்றி மஇகாவை வம்புக்கு இழுக்கும் அடாத செயலை கேவியஸ் நிறுத்திக் கொள்வது நல்லது. இந்தியச் சமுதாயத்தின் மத்தியில் தனக்கென எந்தவித அடையாளமும் இன்றி, மக்களுடன் தொடர்பும் இல்லாத நிலையில், வேறு வழியின்றி குறை கூறும் அரசியலை கையில் எடுத்துள்ளார் அவர்” என்றார் முருகையா.
“பிறரை நோக்கி ஒரு விரலை சுட்டும்போது, மற்ற விரல்கள் நம்மை நோக்கி நீண்டிருப்பதை கேவியஸ் உணர வேண்டும். எனவே பிறர் மீது புழுதி வாரி தூற்றுவதைவிட, மனம் இருந்தால், இந்தியச் சமுதாயத்தின் மீது சிறிதளவேனும் அக்கறை இருந்தால், உண்மையாகவே மக்கள் பணியாற்ற கேவியஸ் முன்வர வேண்டும். டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் மஇகா மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கட்சி தலைமைத்துவம் தெளிவாக உள்ளது. உன்னதமான, பாரபட்சமற்ற தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார் டாக்டர் சுப்ரமணியம். ஆனால் சுயநலப் போக்கோடு, பிறரை குறை கூறி மட்டுமே அரசியல் பிழைப்பு நடத்தும் கேவியஸ் போன்றவர்கள், இனியேனும் தங்கள் தவற்றைத் திருத்திக்கொண்டு, உண்மையை உணர்ந்து செயல்படுவார்களாயின், வரலாறும் சமூகமும் அவர்களை மன்னிப்பதற்கேனும் ஒரு வாய்ப்பு உருவாகும்”
– இவ்வாறு டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.