சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு பற்றிய தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.நடராஜன் என்பவர் தெரிவித்த கருத்துகளுக்கு அதிமுக உறுப்பினர் முன்னாள் டிஜிபி (காவல் துறையின் தலைமை இயக்குநர்) நடராஜ் படத்தைக் காட்டிய குளறுபடியால் அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.
வெள்ள நிவாரணம் குறித்த அரசின் செயல்பாடுகளை அந்த நடராஜன் மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தபடியால், சரியாக விசாரிக்காத அதிமுக தலைமையும் உடனடியாக நட்ராஜைக் (படம்) கட்சியிலிருந்து நீக்கியது.
தற்போது தனது தவறை உணர்ந்து விட்டதால், அதிமுகவிலிருந்து நட்ராஜ் நீக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதற்கிடையில் நடந்த குளறுபடிகளுக்கு தொலைக்காட்சியே பொறுப்பு என நட்ராஜூம் விளக்கம் தந்ததோடு, விளக்கத்தை வழங்க முதல்வரிடம் நேரம் ஒதுக்கித் தரும்படியும் அவர் கேட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே, அவரது விளக்கத்தை அதிமுக ஏற்றுக்கொண்டு மீண்டும் நட்ராஜ் தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக செயல்படுவார் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவசரப்பட்ட அதிமுக தலைமை முறையாக அவரிடமிருந்து விளக்கம் கேட்டிருந்தால் இந்தக் குளறுபடிகளும், நீக்கமும், பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுவதும் நிகழ்ந்திருக்காது.