Home Featured தொழில் நுட்பம் பாரதியார் பிறந்த நாளில் மாலன் படைப்பில் ‘திசைகள்’ மின்னிதழ்!

பாரதியார் பிறந்த நாளில் மாலன் படைப்பில் ‘திசைகள்’ மின்னிதழ்!

1070
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையாளரும், சிந்தனையாளருமான மாலனின் எண்ணத்திலும், கைவண்ணத்திலும் உருவாகியிருக்கின்றது ‘திசைகள்’ எனும் புதிய இணைய மின்னிதழ். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டிருக்கின்றது ‘திசைகள்’.

Maalanவெறும் மின்னிதழாக மட்டுமல்லாமல், மின் நூல்கள் பதிப்பித்தல், எழுத்துப் படிவங்களை மின்வடிவில் ஆவணப்படுத்துதல், வலைத்தள பதிவுகள், இணையச் செய்திகள், போன்ற அம்சங்களையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய, மின்னியல் தகவல் களஞ்சியமாக ‘திசைகள்’ இணையத் தளத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என மாலன் (படம்)  தெரிவித்துள்ளார்.

இணைய வெளியில் தமிழ் ஆர்வலர்களுக்கான ஒரு நூலக அறையாக ‘திசைகள்’ உருவாகும் என்றும் மாலன் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உலகமெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக ‘திசைகள்’ திகழ வேண்டும் என்பதும், அவர்களின் எழுத்துப் படிவங்கள் மற்றும் அவரவர் நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதும், பரிமாறிக் கொள்வதும் ‘திசைகளின்’ மூலமாக தான் முன்னெடுத்துச் செல்ல நினைக்கும் தனது கனவுத் திட்டம் எனவும் மாலன் கூறியிருக்கின்றார்.

Thisaigal-web pageஎனவே, மலேசிய இந்தியர்கள் தங்களின் எழுத்துப் படிவங்களையும், தங்கள் நாட்டு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களையும் அனுப்பி வைக்கலாம் என்றும் அவற்றைப் பதிவேற்றம் செய்ய தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், செல்லியலுக்கு தெரிவித்தச் செய்தியில் மாலன் குறிப்பிட்டுள்ளார்.

முத்து நெடுமாறனின் வாழ்த்தும் வரவேற்பும்

muthu-nedumaranபாரதி பிறந்த நாளில் வெளியாகியிருக்கும் ‘திசைகள்’ குறித்து கருத்து தெரிவித்த முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளர் கணிஞர் முத்து நெடுமாறன் (படம்) 2002ஆம் ஆண்டிலேயே ‘திசைகள்’ ஒரு மின்னிதழாக தமிழ்க் கணினி உலகில் உலா வருவதற்கு அதன் தொழில்நுட்ப வடிவமைப்பில் தான் பங்காற்றியுள்ளதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.

அந்த 2002ஆம் ஆண்டு காலகட்டத்தில் யூனிகோட் எனப்படும் அனைத்துலக அளவில் தரப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் பொதுப் பயன்பாட்டிற்கு வெளிவரத் தொடங்கின. தமிழ் யூனிகோட் எழுத்துருவில் வெளிவந்த முதல் மின்னிதழ் திசைகள் என்பதையும் முத்து நெடுமாறன் நினைவுபடுத்தினார்

“திசைகள்” புதிய வடிவமைப்புடனும், புதிய உள்ளடக்க அம்சங்களுடன் உருவாகி மீண்டும் வெளிவருவதை வரவேற்பதாகவும், மின்னியல் உலகில் வெற்றி முத்திரை பதிக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.