வாஷிங்டன் – ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்க நடத்தி வரும் தொடர் தாக்குதலையடுத்து, தங்களது அடுத்த குறி ஐஎஸ் தலைவர்கள் தான் என அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சூளுரைத்துள்ளார்.
நேற்று வாஷிங்டனில் உள்ள பெண்டகனில், அமெரிக்க தற்காப்புப் படை தலைமையகத்திற்கு வெளியே பேசிய ஒபாமா, அமைப்புகளின் தலைமைத்துவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் மூலம் ஐஎஸ் அமைப்பின் முக்கியமான 8 தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி அவர்களின் பெயரை அறிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் அந்த அமைப்பின் இரண்டாவது தலைவர், இணையம் வழியாக ஆள் சேர்ப்பதில் முன்னிலையில் இருப்பவர், லிபியா பிரிவு இயக்கத்தின் தலைவர், மரண தண்டனை வழங்கி அதைக் காணொளியாக வெளியிடும் ‘ஜிஹாடி ஜான்’ என்ற புனைப்பெயரில் வலம் வந்தவர் ஆகிய முக்கிய தீவிரவாதிகள் அடங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இனி (ஐஎஸ்) தலைவர்கள் ஒளிந்து கொள்ள முடியாது. எங்களின் மிக எளிதான ஒரு தகவல் என்னவென்றால், நீங்கள் தான் அடுத்தது” என்று ஒபாமா சூளுரைத்துள்ளார்.