கோலாலம்பூர்: இன்று காலை நடப்பு தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தரப்பினருக்கும், முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, கட்சிக்கு வெளியே இருக்கும் கிளைகள் மீண்டும் கட்சிக்குள் திரும்புவதற்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேட்புமனுத் தாக்கல் திட்டமிட்டபடி நிர்ணயித்தபடி எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் மஇகா தலைமையக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்குரிய முன் அறிவிப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்ட மஇகா கிளைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்றைய பேச்சுவார்த்தையில் மஇகா சார்பில் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும், மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேலும் கலந்து கொண்டனர். பழனிவேல் தரப்பைப் பிரதிநிதித்து, டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், எல்.சிவசுப்ரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தலைநகரிலுள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில் இன்று காலை இந்த இரண்டு தரப்பினருக்குமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
அரசாங்க அலுவல் காரணமாக, வெளிநாடு சென்றிருப்பதால், தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.
பேசப்பட்டது என்ன?
டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கல், நீதிமன்றம் சென்றதால் கட்சி உறுப்பியத்தை இழந்த நால்வரின் மறுபிரவேசம், 2016ஆம் ஆண்டை தேர்தல் ஆண்டாக அறிவிக்கும் கோரிக்கை, ஆகிய அம்சங்கள் இன்றைய பேச்சு வார்த்தையில் முக்கிய இடத்தை வகித்ததாகத் தெரிகின்றது.
மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கைத் தொடுத்த காரணத்தினால் முன்னாள் தேசியத் தலைவர் ஜி.பழனிவேல், எஸ்.சோதிநாதன், எஸ்.பாலகிருஷ்ணன், ஏ.கே.இராமலிங்கம், பிரகாஷ் ராவ் ஆகிய ஐவரும் தங்களின் உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டதாக 2009 இடைக்கால மத்திய செயலவை மஇகா அமைப்பு விதிகளின்படி முடிவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் கட்சியில் இணைவதற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, கடந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் அவர் மீண்டும் உறுப்பினராக மஇகாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இதன்மூலம், எஞ்சிய நால்வரும் மீண்டும் கட்சிக்குள் திரும்புவதற்கான வாயில் இதன்மூலம் திறக்கப்பட்டிருக்கின்றது.
உறுப்பியம் இழந்தவர்கள் நிலைமை என்ன?
இருப்பினும், அவர்களின் உறுப்பியத் தொடர்ச்சி தொடர்ந்து நீடிக்குமா என்பதும் சட்டப்படி அவர்கள் மீண்டும் கட்சிப் பதவிகளுக்கான தேர்தல்களில் போட்டியிட முடியுமா என்பது குறித்தும் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என பழனிவேல் தரப்பினர் வலியுறுத்துவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இருதரப்புக்கும் இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெங்கு அட்னான் முன்னிலையில் நடைபெற்றன.
இன்று காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், ஏ.கே.இராமலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பழனிவேல் தரப்பிலான மஇகா கிளைகள் எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டத்தோ சோதிநாதன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இனியும் இந்த தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்கித் திசை மாற விரும்பாத, பல மஇகா கிளைகள் நேரடியாக மஇகா தலைமையகத்தை அணுகி எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலில் பங்குபெற ஆர்வம் காட்டி வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.