கோலாலம்பூர், ஜனவரி 11 – நாளை பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எதிர்க்கட்சி பேரணியில் பத்து லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்க் கட்சி தலைவர்கள் அறைகூவல் விட்டுக் கொண்டிருக்க, உண்மையிலேயே அவ்வளவு பேர் கூடுவார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில், இந்த பேரணி முதலில் மெர்டேக்கா அரங்கில் நடைபெற போலீஸ் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, புக்கிட் ஜாலில் அரங்கில் இந்த பேரணி மாற்ற வேண்டும் என்று போலீஸ் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து பேரணி எங்கு நடைபெறும் என்பதில் குழப்பங்கள் நீடிக்கின்றன.
முன்பு கூறியபடி பேரணியை மெர்டேக்கா அரங்கில்தான் நடத்துவோம் என எதிர்க்கட்சிகளும் ஏற்பாட்டாளர்களும் கூறி வருகின்றனர்.
பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களும் இந்த பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.