வத்திகான், மார்ச் 14 – உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மதத்தினர் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் காத்திருந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போப்பாண்டவராக அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ (Jorge Mario Bergoglio) நேற்று புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதுமை காரணமாக தனது போப்பாண்டவர் பதவியிலிருந்து விலகிய போப் பெனடிக்ட்டுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய போப்பாண்டவர் பிரான்சிஸ் என்ற பெயரைத் தாங்கி இனி போப் பிரான்சிஸ் I என்று அழைக்கப்படுவார்.
வத்திகான் நகரை தலைநகராகக் கொண்ட ஏறத்தாழ 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள போப் பிரான்சிசுக்கு 76 வயதாகின்றது.
புதிய பொறுப்பின் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1200 மில்லியன் கத்தோலிக்க சமயத்தினருக்கான மதத் தலைவராக விளங்குவார்.
ஐரோப்பா கண்டத்துக்கு வெளியிலிருந்து கடந்து 1300 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் போப்பாண்டவர் இவராவார்.
வத்திகான் நகரின் செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் புகைக் கூண்டிலிருந்து வெண்புகை தோன்றியவுடன் ஒரு மணி நேரம் கழித்து அந்த தேவாலயத்தின் நடுநாயகமான வெளிப்புற மாடியில் தோன்றிய போப் பிரான்சிஸ் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கியதோடு, தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கூடியிருந்த மக்களைக் கேட்டுக் கொண்டார்.
பாரம்பரிய முறைப்படி புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதனைத் தெரிவிக்கும் விதமாக செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் புகைக் கூண்டிலிருந்து வெண்புகை வெளியிடப்படும்.
புதிய போப்பாண்டவர் லத்தின் அமெரிக்க நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் போப்பாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய போப்பாண்ட்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பை போப்பாண்டவருக்கு அடுத்த நிலையிலுள்ள கார்டினல்கள் சபையின் சார்பாக, பிரசான்ஸ் நாட்டின் கார்டினல் ஜீன் லூயிஸ் தவுரான் லத்தீன் மொழியில்அறிவித்தார். அதன் அர்த்தம் “உங்களுக்கு பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன். நமக்கு இப்போது போப் இருக்கின்றார்” என்பதாகும்.
266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய போப் பிரான்சிஸ், தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்த எல்லா வேட்பாளர்களை விடவும் வயது முதிர்ந்தவர் ஆவார்.
8ஆம் நூற்றாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரியா நாட்டு போப்பாண்டவர் கிரிகோரிக்குப் பின்னர் ஐரோப்பா கண்டத்துக்கு வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் போப்பாண்டவர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் பிரசான்சிஸ் ஆவார்.