Home Featured உலகம் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த ராமாடி நகர் ஈராக்கிய துருப்புகளால் மீட்கப்பட்டது

ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த ராமாடி நகர் ஈராக்கிய துருப்புகளால் மீட்கப்பட்டது

548
0
SHARE
Ad

பாக்தாத் – ஈராக் நாட்டிலுள்ள ராமாடி நகர் இதுவரையில் ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. அந்நகரைத் தற்போது ஈராக்கிய துருப்புகள் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் மீட்டுள்ளனர்.

இதனை ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது.

Iraqi military advance into the centre of Ramadi cityராமாடி நகரை நோக்கி முன்னேறிச் செல்லும் ஈராக்கியத் துருப்புகள்

#TamilSchoolmychoice

பாக்தாத் நகரிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது ராமாடி நகர். கடந்த மே மாதம் இந்நகர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் வீழ்ச்சியடைந்தது. சன்னி அரேபிய மக்களை அதிகமாகக் கொண்டது இந்நகர். ஈராக்கிய இராணுவமோ அதிகமாக ஷியாட் முஸ்லீம்களைக் கொண்டதாகும்.

அமெரிக்க இராணுவத்தின் ஒத்துழைப்போடு இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன், மேற்கத்திய நாடுகளின் இராணுவங்கள் ஐஎஸ் நிலைகள் மீதான தாக்குதல்களைத் தற்போது தீவிரப்படுத்திவருகின்றன.

ராமாடி நகர் ஈராக்கிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை நேற்று இரவு ஈராக்கிய தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பிய நேரத்தில் அந்தக் காட்சிகளின் பின்னணியில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டன.

அந்நகரில் உள்ள அரசாங்கத் தலைமையகக் கட்டிடம் மீண்டும் ஈராக்கியத் துருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் ராமாடி நகர் கைப்பற்றப்பட்டது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகின்றது. காரணம், இதன் மூலம் ஐஎஸ் அமைப்பினர் வடக்குப் பகுதிப் பக்கம் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியாவுக்கு செல்லும் சாலைகளையும் இந்நகர் கொண்டுள்ளது என்பதால் இது மீட்கப்பட்டுள்ளது முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

ராமாடி நகரைக் கைப்பற்றியதைவிட முக்கியமாக அடுத்து எதிர்பார்க்கப்படுவது இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்நகரை ஈராக்கியத் துருப்புகள் தங்களின் கைவசம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதுதான். காரணம், விரட்டியடிக்கப்பட்ட ஐஎஸ் படையினர் மீண்டும் ஒன்று திரண்டு தாக்குதல் தொடுத்து இந்த நகரை மீட்கக் கூடும் என்ற அச்சமும் நிலவுகின்றது.