கோலாலம்பூர் – மலேசிய அழகிப் போட்டிகளில் பொதுவாக இந்தியப் பெண்கள் வெற்றி பெறுவதும் முன்னணிக்கு வருவதும் மிக அரிதான ஒன்று. கலாச்சாரக் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, இதுபோன்ற அழகிப் போட்டிகளில் சீனப் பெண்கள் அதிகமாகப் பங்கெடுப்பதாலும், விளம்பர நிறுவனங்கள், வணிக நோக்கங்கள் காரணமாக, சீனப் பெண்களுக்கே அதிகமாக விளம்பர வாய்ப்புகள் தருவதாலும் அழகிப் போட்டிகளில் இந்தியப் பெண்களின் பங்கெடுப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கின்றது.
ஆனால், 1990ஆம் ஆண்டுகளில் நெடுநெடுவென உயரத்துடன், கட்டான உடலமைப்புடன் அழகிப் போட்டிகளில் உலா வந்து விளம்பர உலகிலும் முத்திரை பதித்தார், இந்தியப் பஞ்சாபி இளம்பெண் ஒருவர். அவர்தான் கவிதா கவுர்.
1990ஆம் ஆண்டில் மிஸ் சார்ம் இண்டர்நேஷனல் (Miss Charm International) – அதாவது அதிக வசீகரத் தன்மை கொண்டவர் – என்ற அனைத்துலகப் பட்டத்தைப் பெற்றார் கவிதா கவுர். மலேசிய வரலாற்றில் அனைத்துலக அளவில் அழகிப் போட்டி ஒன்றில் முதல்நிலை வெற்றி பெற்றவர் என்ற சாதனையை இன்று வரைக்கும் கொண்டிருப்பவர் கவிதா கவுர்தான்.
விளம்பர உலகிலும் வெற்றி முத்திரை பதித்தவர் கவிதா கவுர். சில மலாய் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தனக்கு சொந்தமான விளம்பர முத்திரை கொண்ட நவீன ஆடைகளை வடிவமைத்துத் தயாரிக்கும் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
தனது அழகாலும், உயரம் மற்றும் நளினமான அம்சங்களாலும் கவர்ந்த கவிதா கவுர் இப்போது 44 வயதை அடைந்து விட்டாலும், இன்னும் திருமணம் ஆகாமலேயே இருந்து வந்தார். மலேசியாவின் பிரபலங்கள் பலருடன் அவர் ‘கிசுகிசுக்கப்பட்டும்’ வந்துள்ளார்.
கவிதா கவுருக்குத் திருமணம்
இந்நிலையில் ஓர் இத்தாலியரான ரோபர்ட்டோ குயியாத்தி (Roberto Guiati) என்பவரை கவிதா கவுர் திருமணம் செய்யப் போவதாகவும் அந்த திருமண வரவேற்பு எதிர்வரும் ஜனவரி 8ஆம் தேதி தலைநகரில் உள்ள கிராண்ட் ஹயாட் எனப்படும் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோபர்ட்டோவுடன் கடந்த ஜூலை மாதம் புக்கெட் தீவில் விடுமுறையைக் கழித்தபோது, ரோபர்ட்டோ தன்னை திருமணம் செய்து கொள்ளக் கேட்டதாகவும் கவிதா தெரிவித்துள்ளார்.
ஒரு மண்ணியல் (geologist) நிபுணரான ரோபர்ட்டோ மலேசியாவில் கடந்த 9 ஆண்டுகளாகத் தங்கிப் பணியாற்றி வருகின்றார். எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் அவர் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நண்பரின் மூலமாக கவிதா கவுரைச் சந்தித்திருக்கின்றார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாகவும், இடைப்பட்ட காலத்தில் ரோபர்ட்டோவுடன் தனது குடும்பத்தினர் வணிக ரீதியாக தொடர்பிலும் இருந்து வந்துள்ளனர் என்றும் கவிதா தெரிவித்துள்ளார்.
-செல்லியல் தொகுப்பு