வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் தொடங்கி, உணவுப் பொருட்கள் வரை ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று, இந்திய சந்தைகளில் மிகப் பெரிய அளவிலான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. இத்தனைக்கும், மேற்கத்தியப் பொருட்களுக்கு இருக்கும் விளம்பரம் கூட பதஞ்சலிக்கு இல்லை. ஆனாலும், தரத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களைக் கவர்ந்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள கட்டுரையில், “பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வாளர்கள், பதஞ்சலி வளர்ச்சி குறித்து எச்சரிக்கும் அளவிற்கு அந்நிறுவனம் வளர்ந்துள்ளது. 2006-ல் வெறும் பற்பசை மற்றும் சில பொருட்களை தயாரித்து வந்த பதஞ்சலி, இன்று 700-க்கும் மேற்பட்ட பொருட்களை இலாபகரமாக விற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
தனது பதஞ்சலி நிறுவனம் தொடர்பாக ராம்தேவ் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் தற்போது பயன்படுத்தும் உணவுப் பொருட்களும், அழகு சாதனப் பொருட்களும் விஷம் நிறைந்தவை. ஆனால், எங்களது தயாரிப்புகள் இந்தியர்களின் ஆரம்பக் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. எங்களது பண்டைய மரபு ரீதியான மருந்துகள் மூலம், உலகை வெல்ல வருகிறோம். அதுவரை காத்திருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.