பெய்ஜிங் – அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் மூன்று பத்திரிகையாளர்களை வெளியேற்றுவதாக சீனா நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 19) அறிவித்தது.
கடந்த முப்பதாண்டுகளில் மிக அதிகமான பத்திரிகையாளர்கள் சீனாவிலிருந்து வெளியேற்றப்படுவது இதுவே முதன் முறையாகும்.
“ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா” என்ற பொருளில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் காணப்பட்ட வாசகங்களை மேற்கோள் காட்டி அதன் காரணமாகத்தான் அந்த 3 பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் இரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக சீன அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
தங்களுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் குடிநுழைவு (விசா) அனுமதிகளுக்கான காலத்தைக் குறைப்பது அல்லது இரத்து செய்வது போன்ற முடிவுகளை சீன அரசாங்கம் தொடர்ந்து எடுத்து வந்துள்ளது.