Home One Line P2 இந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி!

இந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி!

1158
0
SHARE
Ad
படம்: டுவிட்டர்

சென்னை: நேற்று புதன்கிழமை இரவு, நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பளுதூக்கி விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பளுதூக்கி விழுந்ததில் சிக்கிய உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்துரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

படப்பிடிப்புத் தளம் அமைக்கப்படும்போது இந்த விபத்து நிகழ்ந்தது என்றும், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்: டுவிட்டர்
#TamilSchoolmychoice

இந்த விபத்தைக் குறித்து நடிகர் கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது “நான் பல விபத்துக்களை எதிர்கொண்டேன், சமாளித்தேன், ஆனால் இன்றைய நாள் மிகவும் கொடூரமானது. நான் மூன்று சகாக்களை இழந்தேன். அவர்களது குடும்ப உறுப்பினர்களின் துன்பம் என் சொந்த வலியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அவர்களில் ஒருவராக நான் அவர்களின் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கல் அவர்களுக்கு, ” என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும், அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் ஏற்பாடு செய்துள்ளனர்.

பளுதூக்கி மீது அமைக்கப்பட இருந்த விளக்கு அந்த இடத்தில் இருந்த ஊழியர்கள் மீது விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர்தான் படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியன் 2’ திரைப்படம் தற்போது சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.