கோலாலம்பூர், மார்ச் 14 – கடந்த வாரம் எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற கல்வி அமைச்சர் மொய்தீன் யாசினின் அறிவிப்பால்,இந்திய சமுதாயத்தினரின் பல்வேறு அமைப்பினரிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியது அனைவரும் அறிந்ததே. அப்போது இப்பிரச்சினையை நிச்சயம் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.
பிரதமர் நல்ல செய்தி சொல்வார்-பிரதமர் துறை அமைச்சர் பழனிவேல் அறிவிப்பு
இதனிடயே நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தேசியத்தலைவர், செனட்டர் பழனிவேல், இந்த எஸ். பி. எம் தமிழ்-தமிழ் இலக்கியப் பாட விவகாரம் குறித்து தாம் அமைச்சரவையில் பேசியதாகவும், வரும் ஞாயிறன்று, கிள்ளானில் நடைபெறும் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பிரதமர் இது சம்பந்தமாக முக்கியமான தகவலைச் சொல்வார் என்றும் தெரிவித்தார்.
எஸ். பி. எம் தேர்வில் 12 பாடங்கள் எடுக்கலாம்-டாக்டர் சுப்ரமணியம் அறிவிப்பு.
இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டபின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட மனிதவளத்துறை அமைச்சர் சுப்ரமணியம், மக்களின் அதிருப்தி மற்றும், கண்டனம் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் அறிவிப்பால் குழப்பமடைந்த மாணவர்களும், பெற்றோர்களும் இனியும் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஏற்கனவே கல்வி அமைச்சால் எடுக்கப்பட்ட முடிவே தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும், இதன்படி எஸ். பி. எம் தேர்வில் 12 பாடங்கள் (10+2) எடுக்கத் தடையில்லை என்றும் உறுதியளித்தார்.
தமிழ்-தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்களின் மதிப்பெண்களும் கல்விச் சான்றிதழில் இடம்பெறும் என்றும் அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.