கோலாலம்பூர் – அண்மையில் மத்திய கிழக்கில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய இரு மலேசியர்கள், 33 பேரைக் கொன்றுள்ளனர் என்று ‘த நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய மாநிலமான சிரியாவிலும், ஈராக்கிலும், மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தைச் சேர்ந்த மொகமட் அமிருல் அகமட் ரஹிம் (வயது 26), சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மொகமட் சியாஸ்வான் மொகமட் சலீமும், இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் மூலம் பலியான மலேசியர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் 29-ம் தேதி, சிரியாவின் ராக்காவில், சிரியன் ஜனநாயக படைக் கூட்டணிக்கு எதிராக தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய அமிருல், தனது காரில் வெடிகுண்டை வைத்து அதை வெடிக்கச் செய்ததில் 21 குர்திஷ் வீரர்கள் பலியாகினர்.
அதே போல், கடந்த ஜனவரி 3-ம் தேதி, பாக்தாத்தில் உள்ள ஸ்பெக்ஹெர் இராணுவத் தளத்தில் உள்ள காவல்துறைப் பயிற்சி மையத்திற்கு சென்ற சியாஸ்வான் மற்றும் 6 பேர் அங்கு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர்.
அப்போது காவல்துறை அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. எனினும், தங்களது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை அவர்கள் வெடிக்கச் செய்ததில் 12 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மலேசியாவைச் சேர்ந்த அமிருலும், சியாஸ்வானும் கடந்த 2014-ம் ஆண்டு ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.