கோலாலம்பூர் – நாளைக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“தைப்பூசக் கொண்டாட்டம் என்பது ஆண்டுக்கொரு முறை மலேசிய இந்துக்கள் தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள கொண்டாடப்படும் திருவிழாவாகும். அதேவேளையில், ஒரே மலேசியா என்பதன் உண்மையான உணர்வுகளை அகில உலகத்திற்கும் மலேசியா பிரதிபலித்துக் காட்டும் விழாவும் தைப்பூசமாகும்” என நஜிப் இன்று தனது வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
“தைப்பூசம் என்பது சமய ரீதியான ஒரு விழா என்றாலும், மலேசியாவைப் பொறுத்தவரையில் மலேசியர்களின் பல இன அமைப்பையும், ஒருவருக்கொருவர் தங்களின் கலாச்சாரம், மதம், நம்பிக்கைகளை பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு, மதிப்பதை உலகுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் தைப்பூசம் திகழ்கின்றது” என்றும் நஜிப் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
“இந்த உன்னதமான கொள்கைகளை நாம் தொடர்ந்து தற்காத்துக் கடைப்பிடித்து, ஒரே மலேசியாவின் உண்மையான உணர்வுகளுக்கேற்ப, நமது தேசிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், நாம் வலுப்படுத்தி வரவேண்டும்” என்றும் நஜிப் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசக் கொண்டாட்டம் அமைய தனது வாழ்த்துகளையும் நஜிப் புலப்படுத்திக் கொண்டுள்ளார்.