விழுப்புரம், மார்ச் 14- நடிகர் விஜய் 11 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுதிமுவென ரசிகர் பட்டாளம் கல்யாண மண்டபத்துக்குள் புகுந்ததால் பெரும் கலவரமாகிவிட்டது.
இதைப் பார்த்துப் பயந்து போன விஜய் அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தார். புரோகிதர்களும் ஓடினர். திருமண மண்டபம் கலாட்டா மண்டபமாகி விட்டது.
நடிகர் விஜய் நேற்று விழுப்புரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இத்திருமணம் விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் நடந்தது.
மண்டபத்திற்குள் அத்தனை பேரையும் விட்டால் நெருக்கடியாகி விடும் என்பதால் திருமண ஜோடிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 700 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது.
பத்திரிக்கையாளர்களை அனுமதித்திருந்தனர். ஆனால் மண்டபத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் திரண்டு நின்றிருந்தனர்.
இந்த நிலையில் விஜய் அங்கு வந்தார். வந்தவர் பேசாமல் கல்யாணத்தை மட்டும் நடத்தி விட்டுப் போயிருந்தால் பிரச்சினை வந்திருக்காது.
மாறாக முற்றத்திற்கு வந்து தனது ரசிகர்களைப் பார்த்து சிரித்து கையசைத்ததால் சும்மா நின்றிருந்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்குப் போய் விட்டனர்.
இந்த நிலையில் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு விஜய் பேசிக் கொண்டிரு்நதார். அப்போது திடீரென ரசிகர்கள் மண்டபத்தின் கதவை உடைத்தபடி உள்ளே அதிரடியாக நுழைந்தனர்.
பின்னர் எங்க தலைவரையா பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறியபடி அங்கிருந்த நாற்காலிகளை அடித்து உடைத்தனர். தண்ணீர் போத்தல்களையும் தூக்கி வீசி உடைத்தனர்.
இதைப் பார்த்த விஜய், வேகமாக அங்கிருந்து கிளம்பினார். கிட்டத்தட்ட ஓடாத குறையாக அவர் வேகமாக வெளியேறினார். பக்கவாட்டு சுவரில் ஏறிக் குதித்து அவர் கிளம்பினார். அவரைப் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் உள்ளே பாய்ந்த ரசிகர்களின் அட்டகாசத்தால் திருமணத்திற்கு மந்திரம் ஓத வந்திருந்த புரோகிதர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது கண்ணாடிச் சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டது.
அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். சில புரோகிதர்கள் வேகமாக வெளியேறினர். இந்தக் கலவரத்தால் கல்யாண மண்டபமே போர்க்களம் போலானது. அது மட்டுமல்லாமல் சமைத்து வைத்திருந்த சாப்பாடும் சாப்பிட ஆள் இல்லாமல் வீணாகிப் போனதாம்.