சென்னை – பத்மஸ்ரீ விருது பெறுவதனால் தன் மீது தேவையற்ற அரசியல் சாயம் பூசப்படும். அதனைத் தவிர்க்கவே பத்மஸ்ரீ விருதினை தான் மறுப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நீண்ட பேஸ்புக் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நான் மறுக்கும் அடிப்படை இதுதான். என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன். இலக்கியத்தின் அழகியல் மையநோக்குமேல், அதன் மானுடம்தழுவிய ஆன்மிகத்தின்மேல், கம்பன் முதல் காளிதாசன் வரை தாகூர் முதல் ஜெயகாந்தன் வரை நான் வரித்திருக்கும் இலக்கிய ஞானாசிரியர்களின் மேல் எனக்கிருக்கும் ஈடுபாடே என் செயல்பாட்டின் அடித்தளம். நவீன இந்திய தேசியத்தின்மேல், இந்துமெய்யியல்மேல், என் குருமரபாக வந்த ஞானத்தின்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையையே நான் முன்வைத்து எழுதிவருகிறேன்.”
“கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு. இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.”
“இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக் கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.”
“விருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.