அண்மைய சில வாரங்களாக, பழனிவேல் தரப்பினர் நடத்திய நிகழ்ச்சிகள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள், எதிலும் கலந்து கொள்ளாமல் சோதிநாதன் புறக்கணித்து வந்துள்ளதாக பழனிவேல் தரப்பினருக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பழனிவேல் தரப்பினரின் அண்மையக் கால நடவடிக்கைகள், அணுகுமுறைகளில், அரசியல் வியூகங்களில் சோதிநாதனுக்கு உடன்பாடு இல்லை என்றும், இதன் காரணமாகவே அவர் ஒதுங்கி நிற்கின்றார் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன.
அதற்கு ஏற்றாற்போல் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இன்று நடந்தேறிய “பெஸ்தா பொங்கல்” என்ற ஒற்றுமைப் பொங்கலுக்கான நிகழ்ச்சி குறித்த விளம்பரங்களில் பழனிவேலுவுக்கு அடுத்து பெரிய அளவில் சோதிநாதனின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
ஆனால், நேற்றைய பொங்கல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாதது ஏற்கனவே நிலவி வந்த ஊகங்கள் தொடர்வதற்கும், மேலும் பெருகுவதற்கும் வழிவகுத்துள்ளது.
சுமார் 200 முதல் 300 பேர் வரை கலந்து கொண்ட நேற்றைய பெஸ்தா பொங்கல் நிகழ்ச்சியில் பழனிவேல் தரப்புத் தலைவர்களோடு, மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோகா பாலமோகன், ஐபிஎப் கட்சித் தலைவர் டத்தோ சம்பந்தன், மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன், மைக்கி எனப்படும் மலேசிய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.கே.ஈஸ்வரன், என மற்ற கட்சித் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.