சிங்கப்பூர் – பிரதமர் நஜிப் மீது எந்தவித குற்றமும் இல்லை என மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அறிவித்த உடனேயே அதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர், பணம் மீண்டும் சவுதி அரேபியாவுக்குச் சென்றது என்றால், சிங்கப்பூரிலுள்ள 1எம்டிபி கணக்குகளில் உள்ள பணமும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் விசாரணைகளும் என்ன ஆயின எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கத்தின் வணிக விவகார இலாகாவும் (Commercial Affairs Department) சிங்கப்பூர் நிதிவாரியமும் (Monetary Authority of Singapore) இணைந்து, நேற்று விடுத்துள்ள அறிக்கையில் 1எம்டிபி தொடர்பான விசாரணைகளின் மூலம் பெரிய அளவிலான எண்ணிக்கை கொண்ட வங்கிக் கணக்குகளைத் தாங்கள் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த இரண்டு அமைப்புகளில் சிங்கை நிதி வாரியம் என்பது நமது மலேசியாவின் பேங்க் நெகாராவுக்கு இணையான செயல்பாடுகளையும், அதிகாரங்களையும் கொண்ட சக்தி வாய்ந்த அமைப்பாகும்.
பத்திரிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கிலேயே தங்களின் பத்திரிக்கை அறிக்கை வெளியிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“கடந்த ஆண்டின் மத்தியிலிருந்து சட்டவிரோத பண பரிமாற்றங்கள் தொடர்பான குற்றங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து மிகத் தீவிரமாக நாங்கள் விசாரணைகள் நடத்தி வருகின்றோம். இது தொடர்பில் பல நிதி நிறுவனங்கள், தனிநபர்கள், ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தி தகவல்கள் பெற்றுள்ளோம். பெரிய எண்ணிக்கை கொண்ட வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளோம்” என அந்த இரு அமைப்புகளும் தங்களின் பத்திரிக்கை அறிக்கையில் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
மேலும் மலேசியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் அந்தப் பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வெளிநாட்டுத் தரப்பில் இருந்து பெறப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்துள்ளதோடு, நாங்களும் சில தகவல்களை அவர்களிடம் கேட்டுப் பெற்று வருகின்றோம். விசாரணைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் மேலும் விவரங்கள் தர முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம்” என அந்தப் பத்திரிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் கடந்தாண்டு இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியது என அறிவித்திருந்தது.