Home நாடு போர்ட்டிக்சன்: சோதிநாதன், அன்வாருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கினார்

போர்ட்டிக்சன்: சோதிநாதன், அன்வாருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கினார்

1518
0
SHARE
Ad
இன்று வெள்ளிக்கிழமை பிரச்சாரக் கூட்டத்தில் அன்வாருடன் சோதிநாதன்

போர்ட்டிக்சன் – அண்மையில் மஇகாவிலிருந்து வெளியேறிய அந்தக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எஸ்.சோதிநாதன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார்.

நாளை சனிக்கிழமை போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று போர்ட்டிக்சனில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அன்வாருடன் சோதிநாதன் கலந்து கொண்டார். அன்வாருக்கு அருகில் சோதிநாதன் இன்றையப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சோதிநாதன் அண்மையில் அன்வாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்து விவாதித்தார் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. அந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இரண்டு தரப்பில் இருந்தும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத் தேர்தலின் வழி மஇகா வேட்பாளராக அப்போதைய தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சோதிநாதன் 2008 வரை அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணையமைச்சராகவும் பணியாற்றினார்.

2018 பொதுத் தேர்தலில் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதி போர்ட்டிக்சன் தொகுதி எனப் பெயர் மாற்றம் கண்டது.

அண்மையில் மஇகாவில் இருந்து வெளியேறும் அதிரடி முடிவை எடுத்த சோதிநாதன், அதன் பின்னர் அரசியலில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்தவித அறிக்கையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தார்.

காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக, மஇகாவிலிருந்து சோதிநாதன் விலகிய பின்னர் சில வாரங்களே கடந்திருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் வந்து சேர்ந்திருக்கிறது.

போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் டத்தோ சோதிநாதனின் பங்கேற்பும், பிரச்சாரமும் அன்வாருக்கு ஆதரவாக இந்திய வாக்காளர்களிடையே குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஆண்டுகள் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் ஒருபக்கம் இருக்க, அந்த வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்தவர் என்ற முறையில் சோதிநாதனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு அந்தத் தொகுதியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஇகா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதால் அதிருப்தியில் இருக்கும் மஇகா உறுப்பினர்கள், இந்திய வாக்காளர்கள், அன்வாருக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்ற சூழ்நிலை எழுந்திருக்கும்போது, சோதிநாதன் அன்வாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்குவது இந்திய வாக்காளர்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தி கணிசமான வாக்குகளை அன்வாருக்குச் சாதகமாகத் திசை திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வழக்கறிஞரான சோதிநாதன் இன்றுவரை போர்ட்டிக்சனிலேயே தங்கியிருக்கிறார் என்பது உள்ளூர் மக்களிடையே அவருக்கிருக்கும் அறிமுகத்தை எடுத்துக் காட்டும் இன்னோர் அம்சமாகும்.

அன்வார் மிக எளிதாக வெல்வார் எனக் கருதப்பட்ட நிலையில், போர்ட்டிக்சனில் பாஸ் கட்சி களத்தில் இறங்க, அதைத் தொடர்ந்து போர்ட்டிக்சன் வட்டாரத்தில் அனைத்து இனத்தினரிடத்திலும் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் இசா சமாட்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ட்டிக்சனில் அன்வார் வெல்வார் என்றாலும், எத்தனை வாக்குகளில் வெல்வார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

இந்நிலையில் சுமார் 22 விழுக்காடு இந்திய வாக்காளர்களைக் கொண்ட போர்ட்டிக்சன் தொகுதியில், இந்திய வாக்காளர்களின் ஆதரவும், டத்தோ சோதிநாதன் போன்றவர்களின் களப் பிரச்சாரமும் முக்கியப் பங்காற்றக் கூடும் என உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

-இரா.முத்தரசன்