Home இந்தியா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்

1234
0
SHARE
Ad

புதுடில்லி – கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வயதுடைய பெண்களும் இனி அனுமதிக்கப்படலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த தீர்ப்பு சரியா, தவறா என்ற சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றன.

நீண்ட காலப் பாரம்பரியமாக, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை ஆலயத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த வழக்கத்தை எதிர்த்து பெண்கள் இயக்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்களை கடந்த பல மாதங்களுக்கு முன்னர் விசாரித்த 5 நீதிபதிகளின் அமர்வைக் கொண்ட உச்ச நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியது.

#TamilSchoolmychoice

நான்கு ஆண் நீதிபதிகள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும், அவ்வாறு மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனத் தீர்ப்பளிக்க, ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா என்பவர் மத விவகாரங்களில் தலையிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றும் அதன் காரணமாக பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற சபரிமலை ஆலய நிர்வாகத்தின் முடிவில் தலையிட முடியாது எனவும் தீர்ப்பளித்தார்.

வரலாற்றுபூர்வமான இந்தத் தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.

அதே வேளையில் இத்தகைய தீர்ப்பு இந்து மத, ஆகம நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை சமர்ப்பிப்போம் என சபரிமலை ஐயப்பன் ஆலய தேவஸ்தானம் அறிவித்துள்ளது.