Home இந்தியா ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

432
0
SHARE
Ad

புதுடெல்லி: காங்கிரசின் முகம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து அவரின் அரசியல் பயணம் மீண்டும் தொடர்கிறது. நாடாளுமன்றத்திற்கும் இனி அவர் செல்ல முடியும்.

அவரின் (கேரளா) வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைக்காலத் தேர்தலும் இதனால் இப்போதைக்கு நடத்தப்படாது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் குஜராத்திலுள்ள சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகால சிறைத்தண்டனை ராகுலுக்கு வழங்கியது.  இதனால் ராகுல் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியையும் இழந்தார். 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என இந்திய அரசியல் சட்டம் நிர்ணயிக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டையும் குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் செய்திருந்த மேல் முறையீடு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது.

ராகுல் காந்தி பேசிய பேச்சு ரசிக்கக் கூடியதாக இல்லை எனக் குட்டும் வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ராகுல் தனது பேச்சில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ராகுல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 111 நாட்களாக அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் பணிகளை செய்ய இயலவில்லை என்றும் உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.