பெய்ஜிங் – சீனாவிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மின்னணு விசா முறை மற்றும் விசா இன்றி மலேசியாவுக்குள் வருவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படுவதை சீனா வரவேற்றுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆவணங்களில் தாம் கையெழுத்திட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசு ரீதியில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான கடிதம் ஒன்றை சீனாவுக்கான மலேசிய தூதரிடம் அளிக்க இருப்பதாகக் கூறினார்.
நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக கடந்த திங்கட்கிழமை சீனா சென்றுள்ளார் சாகிட் ஹமிடி. அங்கு சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கௌ ஷென்குன் மற்றும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மையச் செயலர் மெங் ஆகிய இருவருடனான சந்திப்புகள் குறித்து புதன்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற மலேசிய செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது சாகிட் ஹமிடி விவரித்தார்.
இதற்கிடையே மின்னணு விசா முறை மற்றும் விசா இன்றி மலேசியாவுக்குள் வருவதற்கான வசதியை பிற நாடுகளுக்கும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த இருப்பதாகவும், இதன் வழி அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், மலேசியாவில் 15 நாட்களுக்கும் மேல் தங்காத சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மலேசிய விசா பெறத் தேவையில்லை என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.