சென்னை – தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று திடீரென அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதில், தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நான்குநேரி தொகுதியில் எர்ணாவூர் ராஜேந்திரனும் வெற்றி பெற்றனர்.
இதனிடையே, கடந்த வாரம் எர்ணாவூர் ராஜேந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் நீடிக்கும் என்று அறிவித்தார்.
அப்போதே, அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தான் சரத்குமாருக்கும், எர்ணாவூர் ராஜேந்திரனுக்கு இடையே பிரச்சனை எழுந்ததாகக் கூறப்பட்டது.
இதனிடையே, சரத்குமாரின் இந்த திடீர் முடிவிற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகின்றது.
நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணியினருக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு அளித்தார் என்றும், நடிகை மனோரமா இறந்த போது அஞ்சலி செலுத்த வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்த சரத்குமாரை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் இதனால் ஜெயலலிதா மீது சரத்குமார் மிகவும் அதிருப்தி கொண்டதாகவும் கூறப்படுகின்றது.