கோலாலம்பூர் – அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமார் தற்போது, சிட்னியில் வில்லாவுட் ஆஸ்திரேலிய குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரைக் காண மலேசியாவின் முக்கியப் பிரமுகர்கள் பலர் வந்து போவதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘த சிட்னி ஹெரால்டு’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய எதிர்கட்சியினர் மட்டுமின்றி, அம்னோவைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் அவரை வந்து சந்திப்பதாக அப்பத்திரிக்கை கூறுகின்றது.
“வில்லாவுட்டில், சைருல் மிகவும் வசதியாக வைக்கப்பட்டுள்ளார். அங்கு சமயலறை, தொலைப்பேசி வசதி மற்றும் இணையவசதி ஆகியவை உள்ளன. எல்லைப் படையில் அனுமதி பெற்றவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்” என்றும் அப்பத்திரிக்கை கூறுகின்றது.
இதனிடையே, ‘த வீக்எண்ட் ஆஸ்திரேலியன்’ என்ற பத்திரிக்கை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், சைருல் தனது நிதி பராமரிப்பு மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது மகனின் கணக்கு வழக்குகள் ஆகியவற்றை கவனிக்க சிட்னியைச் சேர்ந்த மலேசிய அலுவலர் ஒருவரை நியமித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தனக்கென்று மலேசியாவிலும் அவர் வழக்கறிஞர்களை நியமித்திருப்பதாகவும் அப்பத்திரிக்கை கூறுகின்றது.
இது போன்ற நியமனங்களை செய்வதற்கு அதிக செலவாகுமே? அதையெல்லாம் யார் அவருக்கு வழங்குகிறார்கள்? என்றும் ‘த வீக்எண்ட் ஆஸ்திரேலியன்’ கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் அந்தச் செலவுகளுக்கான தொகை எல்லாம் அவரது மலேசிய வழக்கறிஞர்கள் மூலமாக செலுத்தப்படுவதாக சைருல் குழுவில் ஒருவர் அப்பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், சைருலை கட்டாயப்படுத்தி மலேசியாவிற்கு அழைத்து அவரது மரண தண்டனையை நிறைவேற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஆஸ்திரேலியா சைருலுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களில், சைருல் தனது வழக்கு தொடர்பாக நிறைய வாக்குமூலங்களை காணொளி வடிவில் வெளியிட்டார்.
அதில், அல்தான்துயா வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு, பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சிக்க வைக்க, சிலர் அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர் என்றும், அவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றும் சைருல் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் நஜிப் சம்பந்தப்பட்டதற்கு காரணம், அல்தான்துயா கொலையான சமயத்தில் நஜிப்பின் பாதுகாவலர்களாக சைருலும், அசிலாவும் இருந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தான் அல்தான்துயாவை கொலை செய்தார்கள் என குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
என்றாலும், ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றுவிட்ட சைருல் அங்கு அடைக்கலம் புகுந்து விட்டார். அந்நாட்டில் தற்போது அவருக்கு சாதகமாக சட்டம் இருப்பதால், சைருலை மீண்டும் மலேசியாவிற்கு கொண்டு வர இயலாத நிலையில் உள்ளது மலேசியா.