Home Featured நாடு “நீக்கத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்யமாட்டேன்! இரண்டு மடங்காக என் போராட்டம் தொடரும்” – மொகிதின் சூளுரை!

“நீக்கத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்யமாட்டேன்! இரண்டு மடங்காக என் போராட்டம் தொடரும்” – மொகிதின் சூளுரை!

590
0
SHARE
Ad

கோலாலம்பூர்- அம்னோவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அந்த முடிவுக்கு எதிராகத் தான் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் மாறாக, நாட்டின் அரசியல் அமைப்பில் மேலும் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தத் தொடர்ந்து பேசி வரப் போவதாக தெரிவித்துள்ளார்.

Tan-Sri-Muhyiddin-Yassin2-1மொகிதின் அடுத்து என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும், நாட்டின் அரசியல் அமைப்புகளில் அடிப்படை சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும், ஏற்படுத்துவதற்காகவும்  தனது போராட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் கூறியுள்ள அவர் “மாறாக, எனது போராட்டம் இரண்டு மடங்காக விரிவடையும்” என்றும் சூளுரைத்துள்ளார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞரை நியமிப்பது அல்லது நீக்குவது தொடர்பில் பிரதமருக்கு இருக்கும் அதிகாரம், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து செயல்படுத்தப்படும் அமுலாக்க நடவடிக்கைகளில் மேலும் சுதந்திரமான அணுகுமுறை, ஊழல் தடுப்பு ஆணையம், மத்திய வங்கியான பேங்க் நெகாரா, காவல் துறை ஆகிய அமைப்புக்களில் சீர்திருத்தங்கள் தேவை என அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

நாட்டின் நிதிநிலைமை மீதான நம்பகத் தன்மையும், தோற்றமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தனது கவலையைத் தெரிவித்த மொகிதின் நாட்டின் பொருளாதாரம், ஊழல் குற்றச்சாட்டுகளினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் கூறினார்.

“பிரதமர் நஜிப்பை பதவியை விட்டு விலகச் சொல்லி நெருக்குதல் கொடுப்பது மட்டும் எனது நோக்கமல்ல. மாறாக, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசாங்க அமைப்புகளை நிராகரிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கறுப்பு அத்தியாயம் நம்மை மேலும் முதிர்ச்சி கொண்டவர்களாக உருவாக்கியுள்ளது என்றும் மொகிதின் கருத்து தெரிவித்துள்ளார்.

“நாடு மீண்டும் ஒரு மதிக்கத்தக்க நிலைமைக்கு திரும்புவதற்கும், மக்கள் மேலும் சுபிட்சமான வாழ்க்கையைப் பெறுவதற்கும், நாம் அனைவரும் கூட்டாக ஒன்றித்து மாற்றங்களை வலியுறுத்த வேண்டும்” என்றும் மொகிதின் தெரிவித்துள்ளார்.