சென்னை – வரப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில், விஜயகாந்தின் தேமுதிக, வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக் கூட்டணி ஆகியவை, எவ்வளவுதான் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகளின் ஆளுமை, அரசியல் வியூகம் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், கூட்டணி அமைக்கும் வியூகங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மார்ச் முதல் வாரத்தில், தமிழகத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்குள் கூட்டணியை முடிவு செய்ய கட்சிகள் பரபரப்பு காட்டி வருகின்றன.
ஜெயலலிதா-நரேந்திர மோடி (கோப்புப் படம்)
தமிழகத்தில் பாஜக கூட்டணி யாருடன் என்பதை நிர்ணயிக்க, பாஜக அமைச்சரும், தமிழகப் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், இன்று சென்னை வந்துள்ளார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமகவின் தலைவர் இராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரையும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் பிரகாஷ் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. திமுகவுடன் ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து விட்டதால், அங்கு இனியும் சென்றால் மரியாதை கிடைக்காது என்பதால், விஜயகாந்த் பாஜகவுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு ஆளாகிவிட்டார்.
இந்த சூழ்நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால், விஜயகாந்த் அங்கும் செல்ல முடியாமல், இங்கும் செல்ல முடியாமல், தனித்து விடப்படுவார், என்ற வியூகத்தை ஜெயலலிதா செயல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜயகாந்த் ஒன்று தனித்துப் போட்டியிட வேண்டும், இல்லாவிட்டால், மக்கள் நலக் கூட்டணியுடன் சேரவேண்டும், என்ற நிலைமைக்கு ஆளாகி விடுவார். இதனால், வாக்குகள் பிரியும், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு கூடும் என ஜெயலலிதா கணக்குப் போடுகின்றார்.
அப்படியே திமுக பக்கம் விஜயகாந்த் சென்றாலும் அங்கு அவருக்கு போதிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மத்தியில் வலுவான ஆட்சியை வழங்கப்போகும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பல சாதகங்களை சாதித்துக் கொள்ளவும் ஜெயலலிதாவால் முடியும். குறிப்பாக, அவரது வழக்கு விவகாரங்கள் இன்னும் முடியவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ் ஜவடேகர்-ஜெயலலிதா இருவருக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்தால், அதற்குப் பின்னர் இதுகுறித்த அடுத்த கட்ட தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-செல்லியல் தொகுப்பு