இஸ்லாமாபாத் – போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுள்ளார். இந்த வருடமே அவர் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்புக்கு வாடிகன் சிட்டி பதில் அனுப்பியுள்ளது. இந்தப் பதில் குறித்து பாகிஸ்தான் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் கம்ரன் மைக்கேல் மற்றும் மத விவகாகரத் துறை அமைச்சர் சர்தார் யூசுப் ஆகியோர் கூறுகையில், போப்பாண்டவர் பாகிஸ்தானுக்கு வர சம்மதித்துள்ளார்.
இந்த ஆண்டே அவரது பயணம் அமையும் என்று அவர்கள் கூறினர். முன்னதாக பிப்ரவரி 23-ஆம் தேதி மைக்கேல் தலைமையிலான ஒரு உயர் மட்டக் குழு ரோமுக்குச் சென்று போப்பாண்டவரை வாடிகன் சிட்டியில் சந்தித்துப் பேசியது.
அப்போது பிரதமர் ஷெரீப்பின் அழைப்புக் கடிதத்தை அவர்கள் போப்பாண்டவரிடம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்காகவும், பாகிஸ்தான் மக்களுக்காகவும், சிறப்புப் பிரார்த்தனைகளையும் செய்தாராம் போப்பாண்டவர்.
கடைசியாக 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த போப்பாண்டவர் 2-ஆம் ஜான் பால் பாகிஸதான் வந்திருந்தார். அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு போப்பாண்டவர் வருகை இடம்பெறவில்லை.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.6 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், அதாவது 20.8 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.