பாக்தாத் – ஈராக் நாட்டின் பாபிலோன் மாகாணத்தின் தலைநகரான ஹில்லா நகரில் உள்ள சோதனைச்சாவடியின் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட டேங்கர் லோரியை வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத் நகரின் தெற்கே சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலியானவர்களில் 28 பேர் உள்ளூர் போலீசார் என்றும் மீதிபேர் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக அமாக் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக்கில் இருந்து ஒழித்துக்கட்ட உச்சகட்ட தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு கூறிவரும் நிலையில் அடுத்தடுத்து இதைப்போன்ற தாக்குதல்களில் பலரை தீவிரவாதிகள் கொன்றுகுவித்து வருவது அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுவதாக உள்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சுமார் 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.